பக்கம் எண் :

648அயோத்தியா காண்டம்

 தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்,
மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார்.

     ஆறி நின்று - (மனம், மொழி, மெய்களால்) அடங்கி; அறம்
ஆற்றலர்
-அறத்தைத் செய்யாதவர்களது;  வாழ்வு என - செல்வபோகம்
(இடையில் அழிதல்) போல; செல்வம் - (பரதனுடன் வந்தார் அனுபவித்த)
செல்வம்;  பாறி வீந்தது -சிதறிக் கெட்டது;  மாறி வந்து பிறந்தன்ன
மாட்சியார் -
விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகிற்கு வந்து பிறந்தது
போன்ற தன்மை அடைந்தவராய அவர்கள்; பரிந்திலர் -தாம்
இழந்துவிட்ட ஒருநாள் போகத்துக்காக இரங்க வில்லை; தேறி - தெளிந்து;
முந்தைத் தம் சிந்தையர் ஆயினார் - முன்பு தமக்குள்ள நினைவுகளை
உடையவர்களாக ஆனார்கள்.

     அறம் உள்ள துணையும் செல்வம் இருந்து அறம் நீங்கியதுபோது
செல்வமும் நீங்கும் ஆதலின், அறம் ஆற்றலர் வாழ்வு எனக் செல்வம் பாறி
வீந்தது.  வீந்தது  என்னாது  ‘பாறி’ என்றது பிறர்க்குக் கொடுத்தலால்
செல்வம் வீதலும் உண்டு ஆதலின், அவ்வாறின்றிச் சிதறிக் கெட்டது
என்றதாம். அறம் ஆற்றலர் வாழ்வு நல்வழியில் கெடாது  தீவழியில்
கெடும்.                                                      19

பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்  

2394.காலை என்று எழுந்தது கண்டு, வானவர்,
‘வேலை அன்று; அனிகமே’ என்று விம்முற,
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ,
பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே.

     பரதன் சேனை -; காலை என்று எழுந்தது  கண்டு - காலைப்
பொழுது  வந்துவிட்டது என்றுகருதிப் புறப்பட்டது கண்டு;  வானவர் -
தேவர்; ‘வேலை அன்று; அனிகமே’ என்றுவிம்முற - இது கடல் அன்று,
சேனைதான் எனக் கருதித் தமது ஐயம் நீங்கி மனக்களிப்புஅடைய;
(அச்சேனை) சோலையும்  கிரிகளும் சுண்ணமாய் எழ - (தாம் செல்லும்
வழியில்உள்ள) சோலையும், மலைகளும் புழுதியாகி மேலே புறப்பட;
பாலை சென்று அடைந்தது - பாலைநிலத்தைச் சென்று சேர்ந்தது.

     இதுகாறும் இருளில் கடல் என்று கருதியிருந்த வானவர் பகற்பொழுது
வந்து புறப்பட்ட அளவிலேசேனை என்று துணிந்தனர் என்பதால் ‘ஏ’
ஈற்றசை.                                                    20

2395.எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன்
அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்பை ஆறினான்;
பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம்
இழிந்தன, வழி நடந்து ஏற ஓணாமையே.