பக்கம் எண் :

698அயோத்தியா காண்டம்

 ‘வள்ளியோய்! கேட்டி’ என்னா,
     வசிட்ட மாமுனிவன் சொன்னான்;

     ஒள்ளியோன் - சீறிய அறிவாளனாகிய இராமன்; இனைய எல்லாம்
உரைத்தலும்
- இத்தகைய சொற்களையெல்லாம் எடுத்துக் கூறுதலும்;
உரைக்கலுற்ற - அவனுக்குப்பதில் கூறுதற்குத் தொடங்கிய; பள்ள நீர்
வெள்ளம் அன்ன பரதனை
- பள்ளத்தில்தங்கிய நீர்ப் பெருக்கை போன்ற
(குணக்கடலாகிய) பரதனை; விலக்கி-(பேசவொண்ணாமல்) தடுத்து நிறுத்தி;
வசிட்ட மாமுனிவன் - வசிட்டனாகிய பெருமையுற்றமுனிவன்;
‘வள்ளியோய் - வள்ளல் தன்மை  உடைய இராமனே!; கேட்டி’ -
கேட்பாயாக; என்னா - என்று அவனை அழைத்து; ‘பண்டு தெள்ளிய
குலத்தோர் செய்கை
- முன்னைய (சூரிய) குலத்தார்களுடைய செயல்களை
எல்லாம்; சிக்கு அற - ஐயம்திரிபின்றி; சிந்தை நோக்கி - அகத்தே
உணர்ந்து; சொன்னான் -சொல்லத் தொடங்கினான்.

     “தள்ளரிய பெருநீதித் தனியாறு புக மண்டும், பள்ளம் எனும்
தகையானை” (657) என்று முன்னும் பரதனைக் கூறினார் ஆதலின், ‘பள்ள
நீர் வெள்ளம் அன்ன பரதன்’ என்றார். ஒள்ளியோன்; ஒண்மை -
அறிவுடைமை; நுண்மாண் நுழைபுலம் எனலாம். “ஒளியார்முன் ஒள்ளியர்
ஆதல்” “உலகம் தழீஇயது ஒட்பம்” (குறள். 425, 714.) என்பன காண்க.   118

கலிவிருத்தம்

2493.‘கிளர் அகன் புனலுள் நின்று, அரி, ஓர் கேழல் ஆய்,
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ -
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே.

     ‘அரி - திருமால்;  ஒர் கேழல் ஆய் - ஒப்பற்ற ஆதிவராக
மூர்த்தியாய்;  உளைவு அரும் - வருந்துதல் இல்லாத; பெருமை ஓர்
எயிற்றின் உள்புரை
- பெருமையுடைய ஒப்பற்ற தந்தத்தின் உள்ளிடத்தில்;
வளர் இளம் பிறையிடை - வளரும்தன்மை உடைய இளம்பிறைச்
சந்திரனிடத்தில்; மறுவின் தோன்ற - களங்கம் போலத்தோன்றும்படி;
கிளர் அகன் புனலுள் நின்று
- மிக்கு எழுகின்ற அகன்ற பிரளய கால
வெள்ள நீரி்ல் இருந்து;  இளை எனும் திருவினை - பூமி என்கின்ற
பெண்ணை;  ஏந்தினான்- எடுத்தருளினான்.

     பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமத் நாராயணன் ஊழிக்கடலில் மூழ்கியிருந்த
பூதேவியை மேலே எடுக்க வராக அவதாரத்தைச் செய்தருளி, தன் கொம்பின்
நுனியாலே பூமியை மேல் எடுத்து நிருத்தி யருளினான் என்கின்ற கதை
இதனுள் கூறப்பட்டது இதனால் இப்போது நடப்பது ஆதிவராக கல்பம்
ஆயிற்று. இளை - பூமி; திரு என்கின்ற சொல் பெண் என்னும் பொதுப்
பொருளில்