. | எண்ணும் நல்வினை முற்றுவித்து, எற்றினான், வெண் நிறத்த தருப்பை விரித்து அரோ. |
நாகணை வள்ளலை நண்ணி - அரவணையில் அறிதுயில் அமர்ந்த அண்ணலைச் சென்றடைந்து;(வழிபட்டு அவனக்கு முன் இராமனை) நான்மறை - நால் வேத முறைப்படி அமைந்த; புண்ணியப்புனல் ஆட்டி- நன்மையுடைய தீர்த்தங்களால் நீராட்டி; புலமையோர் எண்ணும்- அறிவுடையோர் எண்ணுகின்ற; நல்வினை - நல்ல சடங்குகளை; முற்றுவித்து - முடியச்செய்து; வெண்நிறத்த- வெண்மையான; தருப்பை விரித்து - தருப்பைப் புல்லைப் பரப்பி; ஏற்றினான்- அதன்மேல் எழுந்தருளச் செய்தான். பட்டம் பெற்று முடிசூடுவார்க்கு முன்னர் நிகழும் சடங்குகளில் திருமால் கோயிலில் நீராட்டுதலும்ஒன்று போலும். முதல்நாள் விரதம் இருக்கச் செய்தலின் தருப்பையைப் பரப்பி அதன்மேல் ஏறச்செய்தான். ‘ஆயிர மௌலியான்’ தானம் அடைந்து; நாகணை வள்ளலை - இராமனை, புனல் ஆட்டி என நேரே கூறலும்ஒன்று. நண்ணினான். என மேல் முடிய இங்கு நண்ணி எனத் தொடங்கியது அந்தாதித்தொடை. ‘அரோ’-ஈற்றசை. 31 தயரதன் நகரை அழகுசெய்ய ஆணையிடல் 1430. | ஏற்றிட, ஆண்தகை இனிது இருந்துழி, நூல் தட மார்பனும், நொய்தின் எய்தப்போய், ஆற்றல் சால் அரசனுக்கு அறிவித்தான்; அவன், ‘சாற்றுக, நகர் அணி சமைக்க’ என்றனன். |
ஏற்றிட - (தர்ப்பாசனத்தில்) இருக்கச்செய்ய; ஆண்தகை - இராமன்; இனிது இருந்துழி - (விரதாதி சடங்குகளைச் செய்து கொண்டு) இனிமையாக இருந்தபொழுது; நூல் தடமார்பனும் - முப்புரி நூலைத் தரித்த அகன்ற மார்பினை உடைய வசிட்டனம்; நொய்தின் எய்தப் போய்- விரைவாக அடையச் சென்று; ஆற்றல்சால் அரசனுக்கு -வலிமை மிகுந்த சக்கரவர்த்திக்கு; அறிவித்தான் - (செய்தியைத் ) தெரிவித்தான்;அவன் - அம்மன்னவன்; ‘நகர் அணி சமைக்க - நகரத்தை அழகு செய்ய; சாற்றுக- பறையறைவிப்பீராக; என்றனன் - என்று சொன்னான். இருந்த உழி - இருந்துழி, விகாரம். எய்த - அருகில், வசிட்டன் இராமனுக்கு உரிய சடங்குகள்நிறைவேற்றப்பட்ட செய்தியைத் தெரிவித்தான். அதன் பின்னர் முரசு அறைக என்றான் தயரதன். 32 |