வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என - வார்கயிற்றாற் கட்டிய வீரக்கழலை உடைய வீரர் போல; காரொடு தொடர் மதக் களிறு சென்றன - மேகத்தோடு ஒப்புமை பற்றுகின்ற மதநீர் உடைய யானைகள் சென்றன; தாழ்கலைத் தேரொடு - தொங்கக்கூடிய மேகலை யணிந்த தேர் போன்ற அல்குலோடு; நடக்கும்-நடந்து செல்லும்; அத் தெரிவைமாரின்- அந்நாட்டுப்பெண்களைப் போல; பிடிகள் - பெண் யாணைகள்; தாரொடு நடந்தன - தம்மேல்கட்டிய கிண்கிணி மாலையுடன் சென்றன. அழகுபடுத்தப் பெற்ற களிறும் பிடியும் அந்நகரில் நடந்து சென்ற காட்சியை மைந்தரும் மாதரும் போல என்று வருணித்தார்; ‘வார்’ - தோற்கயிறு; வீரக் கழலைக் கட்டப் பயன்படுவது. தார் - கிண்கிணிச் சதங்கை கோத்த மாலை. ‘கலைத்தேர்’ அல்குலுக்கு வெளிப்படை. கலை - மேகலை, முதற்குறை, மேகலை யணிந்த தேர் எனவே அல்குலாயிற்று. இனி, இதனையே அந்நகரில் மைந்தர்களிறு போலச் சென்றனர் என்றும், தெரிவைமார் பிடிபோல நடந்தனர் எனவும் கொள்ள வைத்தநயம் அறிந்து மகிழற்பாலது, ‘ஏ’ காரம் ஈற்றசை. 45 1444. | ஏய்ந்து எழு செல்வமும், அழகும், இன்பமும், தேய்ந்தில; அனையது தெரிந்திலாமையால், ஆய்ந்தனர் பெருகவும் - அமரர், இம்பரில் போந்தவர், ‘போந்திலம்’ என்னும் புந்தியால். |
ஏய்ந்து எழு செல்வமும் - பொருந்தி மேன்மேலும் வளர்கின்ற செல்வமும்; அழகும் -; இன்பமும் -; தேய்ந்தில - குறைந்திருக்க வில்லை (பொன்னகரிற் போலவே நிறைந்துள்ளன);அனையது - அத்தன்மையை ஒத்தது; தெரிந்திலாமையால் - முன்னர் அறியாதபடியால்; இம்பரில் போந்தவர் அமரர் - (இராமனது முடிசூட்டுவிழாக் காண) அயோத்திக்கு வந்தவராகியதேவர்; ‘போந்திலம்’ - இன்னும் அயோத்திக்கு வந்தோம் இல்லை; என்னும் புந்தியால்- என்கின்ற எண்ணத்தால்; பெருகவும் ஆய்ந்தனர் - மிகவும் ஆராய்ந்தனர். அயோத்தி பொன்னகரம் போலச் செல்வம், அழகு, இன்பங்களால் குறை வின்றி இருக்கிறது. அதனால் அயோத்திக்கு வந்த தேவர்கள் ‘இன்னும் அயோத்திக்கு வந்தோம் இல்லையே, நம் பொன்னகரத்தில்தானே இருக்கின்றோம்’ என்று பெரிதும் ஆலோசிக்கத் தொடங்கினார்கள் என்பதால் அயோத்திக்கும்பொன்னகரத்திற்கும் வேறுபாடில்லை என்றார். 36 ஆம் பாடல் முதல் இதுவரை அயோத்திநகரை அலங்கரித்தவாறுகூறினார். 46 கூனியின் கோபம் 1445. | அந் நகர் அணிவுறும் அமலை, வானவர் பொன்னகர் இயல்பு எனப் பொலியும் ஏல்வையில், இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல், துன்ன அருங் கொடு மனக் கூனி தோன்றினாள். |
|