அஃது மாற்றம் உரை செய - அந்த வார்த்தையை மந்தரை சொல்ல; மங்கை உள்ளமும்- (அதுகேட்ட) கைகேயியின் மனமும்; ஆற்றல் சால்- பெருமை அமைந்த; கோசலை அறிவும்- கோசலையின் புத்தியும்; ஒத்த - ஒத்திருந்தன; வேற்றுமை உற்றிலள் -(கூனி கருதியது போல) வேறுபாடு கருதினாளில்லை; (ஏனெனில்) வீரன் தாதை - இராமன் தந்தையாகிய தயரதன்; அவள் இருதயத்து - அந்தக் கைகேயியின் இதயத்தில்; புக்கு ஏற்று - புகுந்து இணங்கி; இருக்கவே கொல் - இருந்ததனாற் போலும். கோசலை எவ்வாறு அறிந்தாளோ அவ்வாறே கைகேயி நினைத்தாள் என்பதாகும். காரணம் இருவர்க்கும் நாயகன் தயரதன் என்பதனால் ‘எப்பொழுதும் கைகேயியின் மனத்தில் தயரதன் இணங்கிவீற்றிருத்தலின் தயரதன் மனமே கைகேயி மனமாயினது அன்றி வேறில்லை யாதலின்’ எனக் கூறினும்பொருந்தும். ஆற்றல் என்பது பெருமை; மூவகையாற்றல்களுள் பெருமையும் ஒன்று. மூவகை ஆற்றலாவன -அறிவு, ஆண்மை, பெருமை என்பன. ‘ஆல்’, ‘ஆம்’ அசை. 59 1458. | ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ, தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற, தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம் நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள். |
தூயவள் - தூய்மையான கைகேயி; ஆய - உண்டாகிய; பேர் அன்பு -பெரிய அன்பு; எனும் - என்கின்ற; அளக்கர் - கடல்; ஆர்த்து எழ - ஆரவாரித்து மேல்கிளம்ப; தேய்வு இலா - களங்கம் இல்லாத; முகமதி - முகமாகியசந்திரன்; விளங்கி - பிரகாசித்து; தேசுஉற - மேலும் ஒளியடைய; உவகை- மகிழ்ச்சி; போய்மிக - எல்லை கடக்க; சுடர்க்கு எலாம் - மூன்று சுடர்களுக்கும்; நாயகம் அனையது - தலைமை பெற்றது போன்றதாகிய; ஓர் மாலை - ஒரு இரத்தினமாலையை; நல்கினாள் - (மந்தரைக்குப் பரிசாக) அளித்தாள். மகிழ்ச்சியான நற்செய்தி அறிவித்தமைக்குப் பரிசாக மாலையை அளித்தாள். ‘முகமதி’ என்ற உருவகத்தில் குறை நீக்கி, ‘தேய்வுஇலா’ என்றார். அன்புக்கடல் கைகேயி அகத்தே பொங்கி மேல்எழுந்தது, அதன் வெளிப்பாடு முகத்தில் தோன்றியது என்றார். மனமாற்றம் சிறிதும் எய்தப்பெறாதநிலையில், இங்கும் ‘தூயவள்’ என்றே கைகேயியைக் குறித்தது காண்க. 60 மாலையை எறிந்து, மந்தரை கூறுதல் 1459. | தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்; அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால் குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே. |
|