| தலைமையோடு, நின் தாரமும், உனக்கு இன்று தருவென்; புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு' என்று புகன்றான். |
உலகம் ஏழினோடு ஏழும் -பதினான்கு உலகில் உள்ளோர் யாவரும்; வந்து -திரண்டு வந்து;அவன் உயிர்க்கு உதவி -வாலியின் உயிரைக் காப்பதற்கு உதவிபுரிந்து;விலகும் என்னினும் -என்னைத் தடுக்குமாயினும்; வில்லிடை வாளியின் -என் வில்லில் பூட்டிய அம்பினால்;வீட்டி - அவனை அழித்து;தலைமையோடு -வானரங்களுக்குத் தலைவனாகும் அரசாட்சியோடு;நின் தாரமும் - உனது மனைவியையும்;உனக்கு இன்று தருவேன் -உனக்கு இப்பொழுதே மீட்டுத் தருவேன்;புலமையோய் - அறிவில் சிறந்தவனே! அவன் உறைவிடம் காட்டு -அவன் வசிக்கும் இடத்தைக் காண்பிப்பாய்;என்று புகன்றான் -என்று (சுக்கிரீவனிடம் இராமன்) கூறினான். பதினான்கு உலகில் உள்ளார் வந்து தடுப்பினும் வாலியைக் கொன்று ஆட்சியையும், மனைவியையும் மீட்டுத் தருவது உறுதி என இராமன் சுக்கிரீவனுக்கு உரைத்தான். முன் தண்டக வனத்து முனிவர்களிடத்தும் 'சூர் அறுத்தவனும், சுடர்நேமியும், ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும், ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர், வேர் அறுப்பென், வெருவன்மின் நீர்' (2652) என இராமன் கூறியுள்ளமை காணலாம். அரச நீதிக்கு ஏற்பத் துணையையும் காலத்தையும் நோக்கி அடங்கியிருந்த சுக்கிரீவன் அறிவுடைமை பற்றிப் 'புலமையோய்' என விளித்தான். உலகம் - இடவாகுபெயர்; விலக்கும் என்பது எதுகை நோக்கி 'விலகும்' என விகாரப்பட்டு நின்றது. 'இன்று தருவென்' என்றது கால வழுவமைதி; உறுதி குறித்தது. 'இன்றே தந்தேன்' என்று சொல்லியிருந்தாலும் அதுவே. 70 3856. | எழுந்து, பேர் உவகைக் கடற் பெருந் திரை இரைப்ப, அழுந்து துனபினுக்கு அக் கரை கண்டனன் அனையான், 'விழுந்ததே இனி வாலி தன் வலி!' என, விரும்பா, மொழிந்த வீரற்கு, 'யாம் எண்ணுவது உண்டு' என மொழிந்தான். |
பேர் உவகைக் கடல் -(இராமன் கூறியதைக் கேட்ட மாத்திரத்தில்) பெரிய மகிழ்ச்சியாகிய கடல்;பெருந்திரை எழுந்து -பெரிய அலைகளோடு பொங்கி எழுந்து;இரைப்ப - ஒலிக்க;அழுந்து துன்பினுக்கு -தான் அழுந்திடக் கிடந்த துயரமாகிய கடலுக்கு;அக்கரை கண்டனன் -எல்லை கண்டவனை;அனையான் -ஒத்து விளங்கும் |