| செங் கண் விற் கரத்து இராமன், அத் திரு நெடு மாலே; இங்கு உதித்தனன், ஈண்டு அறம் நிறுத்துதற்கு; இன்னும், |
தடக்கையில் -(இராமனது) பெரிய கைகளிலும்; தாளில் - பாதங்களிலும்;சங்கு சக்கரக் குறி உள -சங்கு சக்கரங்களின் ரேகைகள் உள்ளன;இத்தனை இலக்கணம் -இத்தனைச் சிறந்த இலக்கணம்;எங்கும் யாவர்க்கும் இல்லை -எவ்வுலகத்திலும் யார்க்கும் இருந்த தில்லை; செங்கண் வில் கரத்து -சிவந்த கண்களையும், வில்லேந்திய கரத்தையும் உடைய;இராமன் -;அத்திரு நெடுமாலே -அப்பரம் பொருளாகிய திருமாலே ஆவன். ஈண்டு -இப்பொழுது;அறம் நிறுத்துதற்கு -அறத்தை நிலைநிறுத்துவதற்கு;இங்கு உதித்தனன் -இவ்வுலகத்தில் அவதரித்துள்ளான்; இன்னும் -மேலும் . . . . இப்பாடலில் 'மேலும்' என்பது அடுத்த பாடலொடு இயைந்து பொருள் முடிபு கொள்ளும். கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர ரேகைகள் அமைவது உத்தம இலக்கணமாகும். அத்தகைய இலக்கணம் திருமாலுக்கே அமைவதாலும், இராமனிடத்தும் எல்லா நல்இலக்கணங்களும் பொருந்தி இருந்தமையாலும், அத் திருமாலே இராமனாக அறத்தை நிலைநாட்டும் பொருட்டு இவ்வுலகில் தோன்றினன் என ஊகித்து உணரலாம் எனக் கூறினன். ''நேமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'' (முல்லைப்பாட்டு 1 - 2) எனத் திருமாலும் 'நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய, கைத்தலங்கள் வந்து காணீரோ' (பெரியாழ்வார் திருமொழி 1-2-12). 'சங்கு ரேகையும் சக்கர ரேகையும் அங்கையுள்ளன ஐயற்காதலால், சங்க பாணியான் சக்கராயுதம் அங்கை ஏந்தும் என்று அறையல் வேண்டுமோ?' (சூளாமணி - குமார காலப் - 45) எனப் பிறநூல்களும் விளக்குதல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இராமன் சங்கு, சக்கர ரேகை உடையவன் என்பது 'சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச்சிங்க ஏறு' (670) எனவும், அவன் அறத்தை நிலைநாட்டத் தோன்றியவன் என்பது 'நல்லறம் நிறுத்தத் தோன்றினான்' (1769) எனவும் முன்னரும் கூறப்பட்டன. இராம அவதாரத்தின் நோக்கத்தை இப்பாடல் உணர்த்துகிறது. இந்நோக்கத்தை அனுமனே இராவணனிடம் உரைப்பதை ''அறம் தலை நிறுத்தி - பிறப்பு அறுப்பான்'' (5885) என்ற பாடலும் உணர்த்தும். 74 3860. | 'செறுக்கும் வன்திறல் திரிபுரம் தீ எழச் சினவிக் கறுக்கும், வெஞ் சினக் காலன்தன் காலமும் காலால் அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடகத் தனி வில் இறுக்கும் தன்மை, அம் மாயவற்கு அன்றியும் எளிதோ? |
|