செறுக்கும் வன்திறல் -யாவரையும் வருத்துகின்ற மிக்க வலி மையை உடைய;திரிபுரம் -முப்புரங்களும்;தீ எழச் சினவி -நெருப்புப் பற்றி எரியும்படி சினங்கொண்டு;கறுக்கும் வெஞ்சினக் காலன் தன் -கோபித்து (மார்க்கண்டேயன் மீது) கொடிய சினங்கொண்ட யமனுடைய;காலமும் - ஆயுள் காலத்தையும்;காலால் அறுக்கும் -காலினால் உதைத்து அழித்துவிட்ட;புங்கவன் -மேலோனான சிவபிரான்;ஆண்ட -கையாண்ட; பேர் ஆடகத்தனி வில் -பெரிய பொன்மயமான ஒப்பற்ற வில்லை; இறுக்கும் தன்மை -முறிக்கின்ற செயல்;அம்மாயவற்கு அன்றியும் - அத்திருமாலுக்கு அல்லாது;எளிதோ - பிறர்க்கு எளிதாமோ? (ஆகாது). திரிபுரம் அழித்து, காலனையும் உதைத்த சிவபிரான் பற்றிய வில் என அவ்வில்லின் வலிமையும் பெருமையும் கூறி, அதனை வளைத்தவன் என இராமன் பெருமை கூறியவாறு. சீதையை மணக்க இராமன் வளைத்த வில் சிவன் வில். திரிபுரம் என்னும் கோட்டை அமைந்த மூன்று நகரங்களின் அழிக்கும் வலிமை தெரிய 'செறுக்கும் வன்திறல் திரிபுரம்' என்றான். மார்க்கண்டேயனைப் பற்றிய யமனது சினம் தோன்றக் 'கறுக்கும் வெஞ்சினக் காலன்' என்றான். சிவபிரான் அவனை அழித்த எளிமை தோன்றக் 'காலால் அறுக்கும்' என உணர்த்தினான்.75 3861. | 'என்னை ஈன்றவன், ''இவ் உலகு யாவையும் ஈன்றான் - தன்னை ஈன்றவற்கு அடிமை செய்; தவம் உனக்கு அஃதே; உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது'' என உரைத்தான்; இன்ன தோன்றலே அவன்; இதற்கு ஏது உண்டு; - இறையோய்! |
இறையோய் -தலைவனே!என்னை ஈன்றவன் - என்னைப் பெற்ற தந்தையாகிய வாயுதேவன்;இவ்வுலகு யாவையும் -(என்னை நோக்கி) ''இவ்வுலகங்களையெல்லாம்;ஈன்றான் தன்னை -படைத்த பிரமனை; ஈன்றவதற்கு -(தன் உந்திக்கமலத்தில்) ஈன்றவனாகிய திருமாலுக்கு;அடிமை செய் - தொண்டு செய்வாய்.தவம் உனக்கு அஃதே - அதுவே உனக்குத் தவமாகும்;உன்னை ஈன்ற எற்கு -உன்னைப் பெற்ற எனக்கும்;உறுபதம் உளது -சிறந்த பதவி கிடைப்பதாகும்'';என உரைத்தான் -என்று சொன்னான்;இன்ன தோன்றலே -இந்த இராமனே;அவன் -அந்தத் திருமாலாகும். இதற்கு ஏது உண்டு -இவ்வாறு யான் கூறுவதற்கு வேறொரு காரணமும் உண்டு. என்னை ஈன்றவன் என்றது வாயு தேவனை; யாவையும் ஈன்றான் - நான்முகன்; ஈன்றான் தன்னை ஈன்றவன் - திருமால். இங்கு இராமனைக் குறித்தது. 'மூன்றுலகும் ஈன்றானை முன்னீன்றானை' (2366) என முன் கூறியுள்ளதும் |