பக்கம் எண் :

114கிட்கிந்தா காண்டம்

காண்க.  மக்கள் செய்யும் நல்ல செயல் தந்தைக்கும் உரியதாய்ப் பெருமை
சேர்க்கும் என்பதை 'உன்னை ஈன்ற எற்கு உறுபதம் உளது' என்ற தொடர்
உணர்த்தும்.  வாயு தன் மைந்தனாகிய அனுமனை நோக்கித் 'திருமாலுக்கு
அடிமை செய்' எனக் கூறிய செய்தி இப்பாடலில்குறிப்பிடப்படுகிறது.   76

3862.'துன்பு தோன்றிய பொழுது,
     உடன் தோன்றுவன்; ''எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு
     என்?'' என்று இயம்ப,
''அன்பு சான்று'' என உரைத்தனன்;
     ஐய! என் ஆக்கை,
என்பு தோன்றல உருகின
     எனின், பிறிது எவனோ?

     ஐய -தலைவனே!முன்பு -முன்னே (அக்காலத்தில் யான் என்
தந்தையை நோக்கி);தோன்றலை அறிதற்கு -அப்பெருமானை நான் அறிந்து
கொள்வதற்கு;முடிவு என் -உறுதியான உபாயம் யாது? என்று இயம்ப -
என்று கேட்க;எவர்க்கும் துன்பு தோன்றிய பொழுது -(அவர்)
''யாவர்க்கும் துன்பம் ஏற்படும் காலத்தில்;உடன் தோன்றுவன் -உடனே
அத்துன்பம் தீர்க்க எதிரில் வந்து தோன்றுவான்;அன்பு சான்று -
அப்பரமனைக் கண்டதும் உனக்கு அவன்மாட்டு அன்பு உண்டாவதே தக்க
சான்றாகும்''என உரைத்தனன் -என்று சொன்னான்;என் யாக்கை - -
(அதற்கேற்ப இப்பெருமானைக் கண்ட மாத்திரத்தில்) என் உடல்;என்பு
தோன்றல -
எலும்புகள் உருத் தோன்றாதனவாக;உருகின எனில் -உருகின
என்றால்;பிறிது எவனோ -இதற்கு மேல் வேறு சான்று எதற்கு?

     முன்னர்ச் செய்யுளில் 'இதற்கு ஏது உண்டு' என்று கூறியதன் விளக்கம்
இங்குத் தரப்பட்டுள்ளது.  வாயுதேவன் கூறியபடி இராமனைக் கண்டவுடன்
அனுமனின் எலும்பு உருகியதால் இராமன் திருமாலே எனத் துணியலாம்
என்பது அனுமனின் கருத்தாகும்.  இதற்குமேல் ஆதாரம்
வேண்டுவதில்லையாதலின் 'பிறிது எவனோ?' என்றான்.  உலகில் துன்பங்கள்
தோன்றுகையில் அவன் உடனே அவதரிப்பான் என்பது புலப்பட 'உடன்
தோன்றுவன்' என்றான்.  துன்பம் ஏற்படுகையில் கடவுளின் திருவருள் கிட்டும்
என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.  என்பு தோன்றல உருகின - எலும்பு
வலுவானது.  அவை வலிமை தோன்றாமல் உருகின போல உடல் நெகிழ்ந்தது
என்பதாம்.  அனுமனுக்கு இவ்வுணர்ச்சி இராமனைக் கண்டவுடன் ஏற்பட்டதை
'என்பு எனக்கு உருகுகின்றது;இவர்கின்றது அளவில் காதல்' (3763) என்ற
கூற்றாலும் உணரலாம்.  இராமனைக் கண்ட அளவில் ''என்பு உருகி நெஞ்சு
உருகி, யார் உருக கில்லார்'' (1588) என மக்கள் உருகி நின்றனர்.  இங்ஙனமே
வீடணனும் இராமனை எண்ணிய மாத்திரத்தில் 'என்பு உறக் குளிரும்; நெஞ்சு
உருகுமேல், அவன் புன்புறப் பிறவியின் பகைஞன் போலும்' என (6384) உருகி
நின்றான்.  உள்ளம் உருகுங்கால் 'என்பு உருகுதல்' இயல்பாதலின் 'என்பு
தோன்றல்' என்றான்.                                            77