மராமரங்கள் ஏழனுள் ஒன்றை அம்பெய்து துளைத்தால் இராமன் வாலியின் மார்பையும் துளைத்து வெல்ல வல்லவன் என்ற நம்பிக்கையில் தன்மனத்துயர் நீங்குமெனச் சுக்கிரீவன் உரைத்தான். எனவே, இராமனது வலிமையைத் தெளிவாக அறிந்து கொள்ள இராமன் அம்பு தொடுத்து ஒரு மரத்தையேனும் துளைக்க வேண்டும் என அவன் உரைத்தான். மாகம் - ஆகாயம். நீண்டன மாகம் என்றது ஒருமை பன்மை மயக்கம். வாலியிடத்துத் தனக்குள்ள அச்சத்தால் சுக்கிரீவன் ஐயமுற்று வருந்தி இங்ஙனம் இராமனிடம் கேட்டான் எனக் கொள்க. 'மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்' என்றது உயர்வு நவிற்சி அணி. 1 3866. | மறு இலான் அது கூறலும், வானவர்க்கு இறைவன், முறுவல் செய்து, அவன் முன்னிய முயற்சியை உன்னி, எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி, அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று, அணைந்தான். |
மறுஇலான் - (மனத்தில்) குற்றம் இல்லாதவனாம் சுக்கிரீவன்;அது கூறலும் -அவ்வார்த்தையைச் சொன்னதும்;வானவர்க்கு இறைவன் - தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமபிரான்;அவன் முன்னிய முயற்சியை உன்னி -சுக்கிரீவன் எண்ணிய காரியத்தை அறிந்து கொண்டு; முறுவல் செய்து -புன் முறுவல் செய்து;எறுழ் வலித் தடந் தோள்களால் - மிக்க வலிமையுடைய பெரிய கைகளால்;சிலையை நாண் ஏற்றி -வில்லை எடுத்து நாண் ஏற்றி;அறிவினால் அளப்பு அரியவற்று -அறிவினால் அளவிட்டு அறிய முடியாத அம்மரங்களின்;அருகு சென்று -அருகில் சென்று;அணைந்தான் - சேர்ந்தான். சுக்கிரீவன் தன் உள்ளத்தில் ஏற்பட்ட ஐயத்தை மறைக்காமல் வெளியிட்டமையால் 'மறுவிலான்' எனச் சிறப்பிக்கப்பட்டான். இராமன் தேவர்களுக்குத் தலைவனாகிய திருமாலின் அவதாரம் ஆதலின் 'வானவர்க்கு இறைவன்' என்றார். இராமனைத் 'தெய்வநாயகன்' (6994) என அங்கதனும், ''தேவதேவனைத் தென்னிலங்கை எரியெழச் செற்றவில்லியை'' (திருவாய்மொழி - 3-6-2) என நம்மாழ்வாரும் கூறியமை காண்க. இராமன் வலிமைக்கு மராமரம் துளைத்தல் மிக எளிய காரியமாதலின், சுக்கிரீவன் மனத்தில் அச்சத்தால் ஏற்பட்ட ஐயத்தை உய்த்துணர்ந்து இராமன் முறுவல் செய்தான். எறுழ் - வலிமை; எறுழ் வலி - ஒரு பொருட்பன்மொழி. அரியவற்று - 'அற்று' - சாரியை. மராமரங்களின் உயர்வும், பருமையும், பரப்பும் மக்கள் அறிவால் அளக்க முடியாதன ஆதலின் 'அறிவினால் அளப்பரியவற்று' என்றார். 2 மராமரங்கள் நின்ற காட்சி 3867. | ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலைந்து |
|