பக்கம் எண் :

120கிட்கிந்தா காண்டம்

பார்த்தோம்;என்பது அல்லது - என்று சொல்வதே அல்லாமல்;மலர்மிசை
அயற்கும்
- தாமரை மலர் மேலிருக்கும் பிரமனுக்கும்;இலை கண்டோம் -
இம்மரங்களின் இலைகளைக் கண்டுவிட்டோம்;எனத் தெரிப்பு அரும் -
என்று சொல்லுதற்கரிய;தரத்தன -சிறப்புத் தன்மையை உடையன.

     சந்திர சூரியர்கள் வானில் இம்மரங்களின் உச்சியைக் கடந்து செல்ல
முடியாமல், அவ்வாறு கடந்து செல்ல அருந்தவம் செய்வர்.  அம்மரங்களைக்
கண்ட நான்முகனும் 'ஒரு மலைச்சாரலைக் கண்டேன்' என்று சொல்வதல்லது
'அம் மரங்களின் உச்சியில் உள்ள இலைகளைப் பார்த்தேன்' என்று சொல்ல
முடியாத உயரம் உடையன அம்மரங்கள் என்பது பொருளாகும்.  அதனால்
சூரிய, சந்திரர் தம் இயக்கம் தடைப்பட்டு அம்மரங்களின் அடிப்பகுதியிடைத்
தங்கி விட, அதைக் காணும் நான்முகன் அப்பகுதியைச் சூரிய, சந்திரர்
தவம்புரியத் தங்குமிடம்  என்று கருதினான்.  இச்செய்யுள் உயர்வு நவிற்சி
அணியின் பாற்படும்.                                           4

3869.ஒக்க நாள் எலாம் உழல்வன,
     உலைவு இல ஆக,
மிக்கது ஓர் பொருள் உளது என
     வேறு கண்டிலமால் -
திக்கும், வானமும், செறிந்த அத்
     தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின், தளர்வு இல,
     இரவி தேர்ப் புரவி;

     திக்கும் வானமும் -எல்லாத் திசைகளிலும் வானத்திலும்;செறிந்த
அத்தரு -
நெருங்கிப் பரந்த அம்மரங்களின்;சீத நிழல்-குளிர்ந்த நிழலை;
புக்கு நீங்கலின் -
அடைந்து செல்வதால்;இரவி தேர்ப்புரவி- சூரியனது
தேரில் கட்டப் பெற்ற குதிரைகள்;தளர்வு இல -தளர்ச்சியில்லாதனவாம்;
ஒக்க நாள் எலாம் -
நாள் முமுவதும் ஒரே விதமாக;உழல்வன -ஓடிக்
கொண்டிருப்பன;உலைவு இல ஆக- (எனினும்) வருத்தம் இல்லாதனவாய்
இருப்பதற்கு;மிக்கது ஓர் பொருள்- மேம்பட்டதொரு காரணம்;உளது
என-
உண்டு என்று;வேறு கண்டிலம் -வேறு கண்டோமில்லை.

     சூரியனது தேர்க்குதிரைகள் நாள் முழுவதும் ஓடுவனவாய் இருந்தும்
தளர்வு அடையாமைக்குக் காரணம், ஒவ்வொரு நாளும் இளைப்பு நீங்க
அம்மரங்களின் குளிர்நிழலில் தங்கிச் செல்வதே காரணமாகும் என்று
கூறியவாறு.  இச்செய்யுள் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.  இதனால்
அம்மரங்களின் இலையடர்ந்த உச்சிக் கிளைகள் சூரிய மண்டலத்திற்கும்
மேலே உயர்ந்திருந்தன என்பது புலனாகும்.  முந்திய செய்யுளில் கதிரவன்,
மரங்களின் நுனி கண்டோட இயலாமை கூறி, இச் செய்யுளில் அவன்
அவற்றின் குளிர்ந்த நிழலுள் புகுந்தோடியது கூறப்பெற்றது.  புரவி - பால்பகா
அஃறிணைப் பெயர்.                                             5