| சேய வானமும், திசைகளும், செவிடு உற, தேவர்க்கு ஏய்வு இலாதது ஓர் பயம் வர, சிலையின் நாண் எறிந்தான். |
அமலன்-குற்றமற்றவனாகிய இராமன்;ஆய மாமரம் அனைத்தையும்- அத்தன்மையனவான பெரிய மராமரங்கள் யாவற்றையும்;நோக்கி நின்று - பார்த்து நின்று;தூய வார் கணை -தூய்மையான நீண்ட தன் அம்பை; துரப்பது -செலுத்துதற்கு ஏற்ற;ஓர் ஆதாரம் தோன்ற- ஒரு விருப்பம் உண்டாக;சேய வானமும் திசைகளும் -நெடுந்தொலைவில் உள்ள வானத்திலும் எல்லாத் திசைகளிலும் உள்ள உயிர்கள்;செவிடு உற -செவிடு படவும்;தேவர்க்கு -தேவர்களுக்கு;ஏய்வு இலாதது ஓர் -(இதுகாறும்) ஏற்படாததொரு;பயம் வர - அச்சம் உண்டாகுமாறும்;சிலையின் -வில்லில் பூட்டிய;நாண் எறிந்தான் -நாணைத் தெறித்து ஓசையை எழுப்பினான். இங்கு நாணின் ஒலிச் சிறப்புக் கூறப் பெற்றது. சுக்கிரீவனுக்குத் தன் வலிமையைக் காட்ட, ஏழு மரங்களையும் ஒரே அம்பால் ஒரு சேரத் துளைக்க விரும்பி வானமும் திசைகளும் செவிடுபட, தேவர்கள் நடுங்க இராமபிரான் நாணொலி எழுப்பினான் என்பதாம். தீயவர்களை அழித்தலும், குறித்த இலக்குத் தப்பாமையும் கணைக்குத் தூய்மையாகும். தேவர்கள் முன் கேட்டிராத நாணொலி யாதலின் அச்சம் எய்துவர் என்பதால் 'ஏய்வு இலாததோர் பயம் வர' என்றார். தூய, சேய - குறிப்புப் பெயரெச்சங்கள், வானம், திசை - இடவாகு பெயர். 12 3877. | ஒக்க நின்றது, எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை; பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ? திக்கயங்களும் மயங்கின; திசைகளும் திகைத்த; புக்கு, அயன் பதி சலிப்புற ஒலித்தது, அப் பொரு வில். |
ஓசை -அந்நாண் ஒலியானது;எவ் உலகமும் - எல்லா உலகங்களிலும்;அங்கு அங்கே -அவ்வவ் விடங்களிலே;ஒக்க நின்றது - ஒரே தன்மைத்தாய்ப் போய் பரவி நின்றது;பக்கம் நின்றவர்க்கு -(என்றால்) அருகில் நின்றவர்களுக்கு;உற்றது பகர்வது -ஏற்பட்ட நிலையைச் சொல்வது;எப்படியோ -எவ்வாறோ? திக்கயங்களும் மயங்கின - (அந்நாண் ஒலியால்) எட்டு திக்கு யானைகளும் மயக்கம் உற்றன;திசைகளும் திகைத்த -எல்லாத் திசைகளும் கலக்கம் அடைந்தன;அப்பொரு வில் - பொருதற்குரிய அந்த வில்லின் நாணொலி;அயன்பதி சலிப்புற - பிரமலோகம் அதிர்ச்சியடையும்படி;புக்கு ஒலித்தது -புகுந்து ஒலித்தது. |