3879. | 'எய்தல் காண்டும்கொல், இன்னம்?' என்று, அரிதின் வந்து எய்தி, பொய் இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில், மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி, வெய்ய வாளியை, ஆளுடை வில்லியும், விட்டான். |
பொய் இல் மாருதி முதலினோர் -பொய்மையில்லாத அனுமன் முதலானவர்கள்;இன்னம் - 'இன்னமும்;எய்தல் காண்டும் கொல் -அம்பு எய்தலைக் காணுதல் வேண்டும் போலும்';என்று -என்று சொல்லிக் கொண்டு;அரிதின் வந்து எய்தி - அரிதாக வந்து இராமன் பால் சேர்ந்து; புகழ்வுறும் பொழுதில் -இராமனின் வில்லாற்றலைப் புகழ்ந்து கொண்டிருக்கையில்;மொய் கொள் -வலிமையைக் கொண்ட;வார் சிலை நாணினை -நீண்ட வில்லின் நாணினை;முறை உற வாங்கி -முறைப்படி நன்றாக இழுத்து;வெய்ய வாளியை -கொடிய அம்பை;ஆளுடை வில்லியும் -எல்லா உயிர்களையும் அடிமையாகக் கொண்ட வில்லாற்றல் மிக்க இராமனும்;விட்டான் - தொடுத்தான். மற்றவர்கள் நாணொலி கேட்டு நடுங்கிக் கலங்க, அனுமன் முதலிய ஒரு சில வீரர்கள் ஒருவாறு தேறி அரிதின் முயன்று இராமன் பக்கம் வந்தனர் என்பதால் 'அரிதின் வந்து எய்தி' என்றார். அனுமன் உண்மை தவறாதவன் என்பதால் 'பொய்யில் மாருதி' என்றார் 'பொய்யிலாதவன்'. (3853) என்றமையும் 'மெய்ம்மை பூண்டான்' (4801) என்றமையும் காண்க. ஆளுடை வில்லி என்று இப்பாடலில் இராமனைக் குறிப்பிடும் கம்பர் 'என்னை ஆளுடை நாயகன்'' ''ஆண்டநாயகன்'' (5207, 5778) என்று இராமனைக் குறிப்பிடல் காண்க. 15 3880. | ஏழு மாமரம் உருவி, கீழ் உலகம் என்று இசைக்கும் ஏழும் ஊடு புக்கு உருவி, பின் உடன் அடுத்து இயன்ற ஏழ் இலாமையான் மீண்டது, அவ் இராகவன் பகழி; ஏழு கண்டபின், உருவுமால்; ஒழிவது அன்று, இன்னும். |
அவ் இராகவன் பகழி-(அவ்வாறு தொடுக்கப்பட்ட) அந்த இராமனின் அம்பு;ஏழு மாமரம் உருவி -ஏழு பெரிய மராமரங்களைத் துளைத்துச் சென்று;கீழ் உலகம் என்று இசைக்கும் -கீழ் உலகம் என்று சொல்லப்படுகின்ற;ஏழும் ஊடு புக்கு உருவி -ஏழையும் |