பக்கம் எண் :

132கிட்கிந்தா காண்டம்

     நெடிது நாள் வாடினார் -(வாலியின் கொடுமையால்) நெடுங்காலமாக
வருந்தியிருந்தவர்களான; மற்ற அவர் எலாம் -சுக்கிரீவனைச் சேர்ந்த மற்ற
வானரர்கள் எல்லோரும்;வாலி காலனை-'வாலிக்கு யமனை;நேடினோம்-
தேடிக் கொண்டேயிருந்து (அடைந்தோம்)';எனா -என்று;உவகை இன்
நறவை உண்டு -
மகிழ்ச்சியாகிய இனிய கள்ளை அருந்தி;உணர்கிலார் -
தம்மை மறந்தவர்களாய்;தோள் எலாம் வளர -தோள்களெல்லாம்
மகிழ்ச்சியால் பூரிக்கப் பெற்று;ஆடினார், பாடினார் -ஆடினார்கள்,
பாடினார்கள்; அங்கும் இங்கும் -அங்குமிங்குமாக;களித்து ஓடினார் -
மகிழ்ந்து ஓடினார்கள்.

     வாலியால் துன்புற்ற வானரர்கள் இராமனது வலிமையைக் கண்டதும்,
வாலி அழிவது திண்ணம் என்ற மகிழ்ச்சியால் ஆடியும், பாடியும், ஓடியும்
மகிழ்ந்தனர்.  ஆடுதல் முதலியன உவகையின் மெய்ப்பாடுகள்.  ''ஆடினர்,
பாடினர் அங்கும் இங்குமாய், ஓடினர் உவகை மாநறவு உண்டு ஓர்கிலார்'' (193)
''ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்,
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்றாடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே''
(பெரியாழ்வார் - 1 - 1 - 2) என்பன ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன.  தம்மை
மெய்ம் மறக்கும்படி செய்தலால் மகிழ்ச்சியை நறவாகக் கூறினார். மகிழ்ச்சி
மிகுதியால் ஆடுதல் முதலிய செயல்களை ஒன்றுபடக் கூறியதால் ஒப்புமைக்
கூட்ட அணியாம்.  உவகையின் நறவு - உருவகம்.                    21