| பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து, எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான். |
அற்றது ஆகிய-அத்தன்மைத் தான;செருப் புரிவுறும் அளவினில்- போரினைச் செய்கின்ற பொழுதில்;கொற்ற வாலியும் -வெற்றியை உடைய வாலியும்;குலவு தோள் வலியொடும் - திரண்ட தன் தோள்களின் வலிமையோடு;அவன் -அவ்வரக்கனது;ஆசையின் நெடும் பணை மருப்பு இணை - திசைகளை அளாவி நீண்ட பருத்த இரண்டு கொம்புகளையும்; பற்றி- பிடித்து;பறித்து -பிடுங்கி எடுத்து;எற்றினான் -(அவற்றைக் கொண்டேஅவனை) அடித்தான்;அவனும் -அவ்வரக்கனும்;வான் இடியின் -வானில்உண்டாகும் இடியைப் போல;நின்று உரறினான் - முழங்கி நின்றான். இருவரும் வெற்றி தோல்வியின்றிப் பொருது வருகையில் வாலி வலிமை மிக்கவனாய், அவ்வரக்கனது கொம்புகளைப் பிடுங்கி அடிக்க, அவன் வலி தாளாது முழக்கமிட்டான். கொம்புகளை வேரொடு பறித்ததால் ஏற்பட்ட துன்பமும் அடிபட்டதால் நேர்ந்த துன்பமும் சேர அரக்கன் கலங்கிக் கதறினான். 10 3896. | 'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள் உலைய, வாய் முழை திறந்து உதிரஆறு ஒழுக, மா மலையின் மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும் குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான்.* |
தலையின் மேல் அடிபட -தலை மீது அடிபடும் படியும்;கடிது சாய் நெடிய தாள் -விரைவில் விழுந்து நீண்ட கால்கள்;உலைய- ஒடியும் படியும்;முழை வாய் திறந்து -மலைக்குகை போன்ற வாய் திறந்து;உதிர ஆறு ஒழுக -குருதி ஆறு பெருகவும்;மா மலையின் மேல் -பெரிய மலையின் மீது;உரும் இடித்தென்ன- இடி இடித்தாற் போன்று;வான் மண்ணொடும் குலைய -விண்ணுலகமும நிலவுலகமும் நடுங்கவும்; மாதிசைகளும் செவிடுற - பெரிய திசைகள் எல்லாம் செவிடுபடவும்; குத்தினான் -குத்தினான். விண்ணுலகமும் மண்ணுலகமும் நடுங்க, திசைகள் செவிடுபட, அசுரன் கால் ஒடிந்து விழ, வாய்வழியே குருதி பெருக்கெடுத்தோட, மலைமீது இடி விழுந்தாற்போல அவ்வரக்கன் தலைமேல் வாலி குத்தினான் என்பது பொருளாகும். வாலி கொடுத்த குத்தின் வலிமை இதனால் புலப்படும். 11 |