பக்கம் எண் :

கலன்காண் படலம் 143

6.  கலன் காண் படலம்

     சுக்கிரீவன் சீதையின் அணிகலன்களைக் காட்ட இராமன் அவற்றைக்
கண்டு வருந்துவதை இப்படலம் கூறுகிறது.

     இராமன் சோலையில் இருக்கச் சுக்கிரீவன் சீதை நிலத்திலிட்ட அணிகல
முடிப்பை இராமனிடம் காட்டினான்.  அணிகலன்களைக் கண்ட இராமன்
மகிழ்ச்சியும் துயரமும் மாறிமாறி எழ ஒருநிலைப்படாது தளர்ந்தான்.
சுக்கிரீவன் ஆறுதல் மொழிபல கூறித் தேற்றினான்.  தன்னை நம்பியவளின்
துயர்போக்க இயலாமையைக் கூறி இராமன் வருந்தினான்.  பழி நீங்க
இறந்துபடுவதே செய்யத்தக்கது என்றான்.  எனினும், சுக்கிரீவன் குறையைத்
தீர்த்த பின்னரே வேறு செய்வது என உரைத்தான்.  அந்நிலையில் அனுமன்
இராமனை நோக்கி வாலியைக் கொன்று, சுக்கிரீவனை அரசனாக்கிப் படை
பெருக்கி, எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் சீதையைத் தேடச் செய்வதே
ஏற்றதெனக் கூற, அனைவரும் அக்கருத்தை ஏற்று வாலி இருக்கும்
இடத்திற்குச் சென்றனர்.

இராமனிடம், சுக்கிரீவன் சில செய்திகளைத் தெரிவித்தல்

கலிவிருத்தம்

3901.ஆயிடை, அரிக்குலம் அசனி அஞ்சிட
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல், ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய்,
'நாயக! உணர்த்துவது உண்டு நான்' எனா.

     ஆயிடை- அப்பொழுது; அரிக்குலம் -குரங்குக் கூட்டம்;அசனி
அஞ்சிட -
இடியும் அச்சம் அடையுமாறு; வாய் திறந்து ஆர்த்தது -
வாய்விட்டு ஆரவாரித்தது;வள்ளல் -இராமன்;ஓங்கிய தூய நல்
சோலையில் -
உயர்ந்த தூய்மையான அழகிய சோலையில்;இருந்த
சூழல்வாய் -
வந்து தங்கியிருந்த சமயத்தில்;நாயக - (சுக்கிரீவன் இராமனை
நோக்கித்) 'தலைவனே!' நான் உணர்த்துவது -நான் சொல்லவேண்டுவது;
உண்டு எனா -
(ஒன்று) உளது என்று -

     'எனா' என்னும் வினையெச்சம் இப்படலத்தின் நான்காம் பாடலில் வரும்.
'காட்டினன்' என்னும் வினைமுற்றைக் கொண்டு முடியும்.

    மராமரங்களைத் துளைத்தும், துந்துபியை உந்தியும் தம் வலிமையைக்
காட்டிச்சுக்கிரீவனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளித்தமையால் மகிழ்ச்சி
மிகுதியால்அரிக்குலம் வாய்திறந்து ஆர்த்தது.                        1