(அம்முடிப்பை அது தரையில் விழுவதற்கு முன்) நாங்கள் கைகளில் ஏந்திக் கொண்டோம். காட்டிற்கு வருகையில் இராமன் கூறியாங்குத் தன் அணிகலன்களில் பெரும்பாலானவற்றை அந்தணர்களுக்குச் சீதை தானம் செய்து விட்டாள். பிறகு அத்திரி முனிவரின் ஆசிரமத்தில் அவர் மனைவியான அனசூயையால் அளிக்கப்பட்ட அணிகலன்களை அணிந்து கொண்டிருந்தனள் என்பது இங்கு அறியத்தக்கது. உழையரின் - தூதர்கள் போல; அணிகலன்கள் தன்னிலையினைத் தூதர்கள் போல நினக்குத் தெரிவிப்பது உண்டு என்று நினைந்தோ என்ற பொருளை முதலடி உணர்த்தும். கருநிறத்தாலும் நீர்பொழிதலாலும் மழை கண்ணிற்கு உவமை ஆயிற்று. கண்ணீரின் மிகுதி தோன்ற 'வாரி' என்றான். குழை பொரு கண் - கண்கள் காதளவு நீண்டிருத்தல் உத்தம இலக்கணம் உணர்த்தியதாகும். சீதை தன் அணிகலன்களை நிலத்திலிட்ட செய்தி 'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை, வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை, நிலம் சேர் மதரணி' (378) என்று புறநானூற்றிலும கூறப்பட்டுள்ளது. 3 சீதையின் அணிகலன்களைக் கண்ட இராமன் நிலை 3904. | 'வைத்தனம் இவ் வழி; - வள்ளல்! - நின் வயின் உய்த்தனம் தந்த போது உணர்தியால் எனா கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்; - நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயத்தான். |
நெய்த்தலை -தேனில்;பால் கலந்தனைய -பால் கலந்தாற் போன்ற; நேயத்தான் -இனிய நட்பினை உடைய சுக்கிரீவன்;வள்ளல் -(இராமனை நோக்கி) 'வள்ளலே! இவ்வழி வைத்தனம் -அந்த அணிகல முடிப்பை இங்கே பாதுகாப்பாக வைத்துள்ளோம்;நின்வயின் -நின்னிடத்து;உய்த்தனம் தந்த போது -கொண்டு வந்து தரும் போது;உணர்தி -உண்மையை அறிவாய்';எனா -என்று கூறி;கைத்தலத்து -கையில்;அன்னவை கொணர்ந்து -அந்த அணிகலன்கள்களைக் கொண்டு வந்து;காட்டினான்--; நெய் - தேன்; நெய்த்தலைப் பால் கலந்தனைய நேயம் என்றது வெவ்வேறு சுவையுடைய தேனும் பாலும் கலக்கையில் புதிய இனிய சுவை பயப்பது போல் வேறுவேறு இயல்பினரான இராம சுக்கிரீவர் நட்பால் புதிய உறவு ஏற்பட்டு இனிமை பயக்கும் என்றவாறு. நெய்த்தலை - தலை ஏழனுருபு; கலந்ததனைய என்பது கலந்தனைய எனவிகாரமாயிற்று. 4 3905. | தெரிவுற நோக்கினன்,தெரிவை மெய் அணி; |
|