என்று;இடித்து உரப்பி -அதட்டிக் கூறி;அடித்தலங்கள் கொட்டி -தன் கால்களால் ஓசை உண்டாகுமாறு தரையில் மிதித்து;வாய் மடித்து - சினத்தால் வாய் உதடுகளை மடித்துக் கொண்டு;அடுத்து அலங்கு தோள் புடைத்து -அடுத்து விளங்குகின்ற தன் தோள்களைத் தட்டிக் கொண்டு; நின்று உளைத்த பூசல் -நின்று வலியப் போருக்கு அழைத்த (சுக்கிரீவனின்) ஆரவாரம்;அங்கு -கிட்கிந்தை நகரத்தில்;இடம் மிக்குத் துடிப்ப -இடத் தோளும் இடக்கண்ணும் துடிக்க;உறங்கு வாலி - உறங்கிக் கொண்டிருக்கும் வாலியின்;திண்செவித் துளைக்கண் -வலிய செவித்துளையிலே;புக்கது என்ப -சென்று புகுந்தது என்பர். அடித்தலம் கொட்டுதல் - பாதங்களைத் தரையில் தட்டி மிகுத்து ஓசை உண்டாகும்படி நடத்தல்: வாய்மடித்தல் - வெகுளியின் மெய்ப்பாடு. ஆடவர்க்கு இடப்பக்கம் துடித்தல் தீ நிமித்தத்திற்கு அறிகுறி என்பர். சுக்கிரீவனின் ஆரவாரம் வாலியின் செவியில் படுகையில், அவனது அழிவைக் குறிக்கும் வகையில் அவனது இடப்பக்கம் 'துடித்த' செய்தி கூறப்பட்டது. 'மின்னின் அன்ன புருவமும் விண்ணினைத், துன்னு தோளும், இடம் துடியா நின்றான்' (7348). 'செயிரில் தீர்ந்த செழுந்தாமரைக் கண் இடனாடலும் (சிந்தா. 1156), ''இடுக்கண் தருதற் கேதுவாகி, இடக்கண் ஆடலும்'' (பெருங்கதை. 2-18- 32-33) என்னும் இடங்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. பூசல் - போர் ஆரவாரம். முதல் 12 பாடல்களை நான்கு சீரடிகளாய்ப் பிரித்து கலிவிருத்தம் என்றும்கொள்வதுண்டு. 12 வாலி போருக்கு எழுதல் கலிவிருத்தம் | 3947. | மால் பெருங் கட கரி முழக்கம் வாள் அரி ஏற்பது செவித்தலத்து என்ன, ஓங்கிய ஆர்ப்பு ஒலி கேட்டனன் - அமளிமேல் ஒரு பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான். |
அமளி மேல் - படுக்கையின் மேல்;ஒரு பாற்கடல் கிடந்ததே அனைய -ஒப்பற்ற பாற்கடல் படுத்திருந்தது போன்ற; பான்மை யான் - தன்மையை உடையவனாகிய வாலி;மால்பெரும் கடகரி முழக்கம் -மயக்கம் கொண்ட பெரிய மதயானையின் முழக்கத்தை;வாள் அரி செவித்தலத்து - கொடிய சிங்கம் தன் காதுகளில்;ஏற்பது என்ன -ஏற்றுக் கொண்டாற்போல; ஓங்கிய ஆர்ப்பு ஒலி -மிகுதியாக எழுந்த (அச்சுக்கிரீவனின்) கர்ச்சனை ஒலியை;கேட்டனன் -கேட்டான். மலை முழையினுள் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிங்கம் மதயானையின் பிளிறலைக் கேட்டது போலத் தன் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த வாலி சுக்கிரீவனின் போர்முழக்கத்தைக் கேட்டான். உவமை அணி. வாலி கம்பீரமான தோற்றமும் வெண்ணிறமும் கொண்டவனாதலின் 'பாற் கடல் கிடந்ததே அனைய பான்மையான்' எனப்பட்டான். வாலி வெண்ணிற மேனியன் என்பதை 'இந்திரன் தனிப்புதல்வன், இன்னனிச் சந்திரன் தழைத்தனைய தன்மையான்' (3834). ''பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார்' (3979) |