| 3951. | கைக் கொடு கைத்தலம் புடைப்ப, காவலின் திக் கயங்களும் மதச் செருக்குச் சிந்தின; உக்கன உரும்இனம்; உலைந்த உம்பரும்; நெக்கன, நெரிந்தன, நின்ற குன்றமே. |
கைக் கொடு கைத்தலம் புடைப்பு -(வாலி சினத்தால்) ஒரு கையினைக் கொண்டு மற்றொரு கையினைத் தட்ட;காவலின் திக்கயங்களும்-(அதனால் எழுந்த ஓசையால்) உலகினைத் தாங்கி நின்று காவல் புரியும்எட்டுத்திசை யானைகளும்;மதச் செருக்குச் சிந்தின -மதக் களிப்பாகியசெருக்கினை நீங்கின;உரும் இனம் உக்கன - இடியின் கூட்டங்கள் (தம்வலிமை குறைந்து) உதிர்ந்தன;உம்பரும் உலைந்த - தேவர் உலகங்களும்வருந்தின;நின்ற குன்றம் -(பெயர்தலின்றி) நிலை பெற்றிருந்த மலைகளும்;நெக்கன நெரிந்தன -பிளவுபட்டு நொறுங்கின. வாலி தன் இரு கரங்களைத் தட்டி எழுப்பிய ஒலியால் வலிமை வாய்ந்ததிக்கு யானைகளும், இடியின் கூட்டமும், மலைகளும் நிலைகலங்கின என்பதால் வாலியின் வலிமை மிகுதி உணர்த்தப்படுகிறது. நெக்குதல் - நெகிழ்ந்து பிளவுபடல். ''நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்து வேருக்கு நெக்கு விடும்'' என்பது நல்வழி.(33). 17 | 3952. | 'வந்தெனன்! வந்தெனன்!' என்ற வாசகம் இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன; சந்திரன் முதலிய தாரகைக் குழாம் சிந்தின, மணி முடிச் சிகரம் தீண்டவே. |
வந்தனென்! வந்தனென்!- 'வந்து விட்டேன், வந்து விட்டேன்';என்ற வாசகம் - என்று வாலி கூறிய சொற்கள்;இந்திரி முதல் - இந்திரனுக்குரிய கிழக்குத் திசை முதல்;திசை எட்டும் கேட்டன -எட்டுத் திசைகளிலும் கேட்டன;மணி முடிச்சிகரம் தீண்டவே -(அவன் போருக்குக் கிளர்ந்து எழுந்தபோது) அவனது மணிகள் இழைக்கப்பெற்ற முடியின் உச்சி தம் மேல் பட்டதால்;சந்திரன் முதலிய -(வானத்தில்) சந்திரனைத் தம் தலைவனாகக் கொண்ட;தாரகைக் குழாம் சிந்தின -விண்மீன் தொகுதிகள் கீழே சிதறி விழ்ந்தன. வந்தனென், வந்தனென் - வெகுளியின் வந்த அடுக்குத் தொடர். இந்திரி - இந்திரனது திசையாகிய கிழக்கு. 'திசை எட்டும் கேட்டன' என்பது அவனது உரத்த குரலையும் 'மணிமுடிச் சிகரம் தீண்டத் தாரகைக் குழாம் சிந்தின' என்பது அவன் வடிவத்தின் உயர்வையும் பெருமையினையும் குறித்தன. சந்திரன் நட்சத்திரங்களின் தலைவனாதலின் 'சந்திரன் முதலிய தாரகைக் குழாய்' என்றார். தாரகாபதி, உடுபதி என்னும் பெயர்கள் சந்திரனுக்கு உரியன. உயர்வு நவிற்சி அணி. 18 |