| 3953. | வீசின காற்றின் வேர் பறிந்து, வெற்புஇனம் ஆசையை உற்றன; அண்டப் பித்திகை பூசின, வெண் மயிர் பொடித்த வெம் பொறி; கூசினன் அந்தகன்; குலைந்தது உம்பரே. |
வீசின காற்றின் -(வாலி எழுந்த வேகத்தால்) வீசின காற்றினால்; வெற்பு இனம் -மலைக் கூட்டங்கள்;வேர் பறிந்து -நிலை பெயர்ந்தவனாய்;ஆசையை உற்றன - திசையின் எல்லையை அடைந்து வீழ்ந்தன;வெண்மயிர் பொடித்த வெம்பொறி -(மேனியில் அடர்ந்துள்ள) வெண்மை வாய்ந்த மயிர்க்கால் தொறும் தோன்றிய வெம்மையுடைய அனற்பொறிகள்;அண்டப் பித்திகை பூசின-அண்டப்பரப்பின் மதிற் சுவரை மறைத்தன;அந்தகன் கூசினன் -(இவ்வாறு சினத்துடன் வரும் வாலியைக்காண) யமனும் கண் கூசினான்;உம்பர் குலைந்தது -தேவர்களும் நிலை குலைந்தனர். இப்பாடல் வாலியின் வேகத்தையும் சினமிகுதியையும் விளக்கும். வெண் மயிர் பொடித்த வெம்பொறி - மயிர்க்கால்களில் இருந்து எழுந்த தீப்பொறிகள். 'அண்டப் பித்திகை பூசின' என்றதால் அண்டச்சுவர்கள் வரை இவன் சினத்தீப் பொறிகள் சென்று ஒளி வீசின என்பதாம். உம்பர் - மேல் உலகம்; இடவாகு பெயராய்த் தேவர்களைக் குறிக்கும். அந்தகன். உயிர்கட்கு அந்தத்தைச் செய்வோனாகிய இயமன். 19 | 3954. | கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின; தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின, வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு அரோ. |
கடித்த வாய் எயிறு உரு -(வாலி வெகுண்டு) கடித்த வாயிலிலுள்ள பற்களினின்று வெளிப்பட்ட;கனல்கள் -தீப்பொறிகள்;கார்விசும்பு இடித்தவாய்- கரிய மேகங்கள் விசும்பிடத்து ஒன்றோடொன்று மோதிய நிலையில்;உகும் உரும் இனத்தின் -விழும் இடிகளின் கூட்டம் போல; சிந்தின -எங்கும் சிதறின.வடித்த தோள் வலயத்தின் -(அவன் தோள்தட்டி ஆர்த்த நிலையில்) சிறந்த அவன் தோள் வளைகளில்;வயங்கு காசு -விளங்குகின்ற இரத்தினங்கள்;தடித்து வீழ்வன என - மின்னல்கள் கீழே விழுந்தாற்போல; தகர்ந்து சிந்தின -சிதறி வீழ்ந்தன. எயிறு தோன்றப் பற்களைக் கடித்தல் - வெகுளியில் தோன்றும் மெய்ப்பாடு. காசு - இரத்தினம். 'தப்பின மணி, காசும், சங்கமும் மயிலன்னார்' (1189) |