'திறம் செய் காசு ஈன்ற சோதி' (1129) என்னும் இடங்களில் இரத்தினம் எனும் பொருளில் 'காசு' ஆளப்பட்டுள்ளமை காண்க. தடித்து - மின்னல். வாலியின் வெகுளி மிகுதியை உயர்வு நவிற்சியால் கூறிய பாடல். அரோ -அசை. 20 | 3955. | ஞாலமும், நால் திசைப் புனலும், நாகரும், மூலமும், முற்றிட முடிவில் தீக்கும் அக் காலமும் ஒத்தனன்; கடலில் தான் கடை ஆலமும் ஒத்தனன், எவரும் அஞ்சவே. |
எவரும் அஞ்ச -(அப்பொழுது வாலி) காண்பவர் எவரும் அஞ்சும்படியாக;ஞாலமும் -நிலவுலகமும்;நால்திசைப் புனலும் - நான்கு திசைகளிலும் உள்ள கடல்களும்;நாகரும் - தேவர்களும்;மூலமும் - எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான தத்துவங்களும்;முற்றிட -அழியும்படி; முடிவில் தீக்கும் -யுகமுடிவில் அனைத்தையும் எரிக்கும்;அக்காலமும் - அந்த ஊழிக்காலத்தீயினையும்;ஒத்தனன் -ஒத்து விளங்கினான். கடலில் தான் கடை -(முன்பு) தன்னால் கடையப்பெற்ற பாற்கடலில் தோன்றிய; ஆலமும் ஒத்தனன் -ஆலகால நஞ்சையும் ஒத்து விளங்கினான். வாலியின் கொடுந்தோற்றமும் வெகுளியும் புலப்பட, ஊழித்தீப் போலவும், தான் கடைந்தபோது பாற்கடலினின்று வெளிப்பட்ட ஆலகால நஞ்சு போலவும் விளங்கினான் என்றார். நாகர் - தேவர்கள், நாகர்கள் என இருவரையும் குறிக்கும் சொல். பாற்கடல் கடைகையில் தேவர்களும் அசுரர்களும் தளர்ச்சி உற்ற போது வாலி தன் இரு கரங்களால் கடைந்தான் ஆதலின் 'தான் கடை கடலில்' என்றார். இச் செய்தி 'சுழலும் வேலையைக் கடையும் தோளினான்' (3823) என்னும் இடத்தும் கூறப்பட்டது. பாற்கடலில் வெளிப்பட்ட ஆலகால நஞ்சு யாவரையும் அஞ்சி ஓடச் செய்ததுபோல வாலியும் தன்னைக் கண்டார் யாவரும் அஞ்சி ஓடுமாறு வெளிப்பட்டான் என்பதாம். காலம் - காலாக்கினிக்கு (ஊழிக்காலத்தீ) ஆகுபெயர். 21 தாரை விலக்கலும், வாலி மறுத்துக் கூறலும் | 3956. | ஆயிடை,தாரை என்று அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள், இடை விலக்கினாள்; வாயிடைப் புகை வர, வாலி கண் வரும் தீயிடை, தன் நெடுங் கூந்தல் தீகின்றாள். |
ஆயிடை -அப்பொழுது;தாரை என்று -தாரை என்று பெயர் கூறப்பட்டு;அமிழ்தின் தோன்றிய -அமுதம் போலக் காணப்படுகின்ற; வேயிடைத் தோளினாள் -மூங்கிலின் தன்மையைத் தன்னிடத்தே கொண்ட தோள்களை உடையவள்;வாயிடைப் புகைவர-வாயினின்று சினத்தால் புகை வருமாறு;வாலி -வாலியின்;கண் வரும் தீயிடை -கண்களிலிருந்து வரும் சினத்தீயிடையே;தன் நெடுங் கூந்தல் தீகின்றாள் -தன் நீண்ட கூந்தல் எரியப் பெற்றவளாய்;இடை விலக்கினாள் -இடை நின்று (அவனைத் தடுத்து) விலக்கினாள். |