அ+இடை = ஆயிடை என அகரச்சுட்டு நீண்டது. ஐம்பொறிகட்கும் இனியளாதல் பற்றி அமுதம் போலத் தோன்றியவள் என்றார். அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள். முன் பாடலில் 'கடலில் தான் கடை ஆலமும் ஒத்தான்' என்றமையால், அதனை இங்குக் கொண்டு கூட்டினால், ஆலத்திற்குப் பிறகு கிடைத்த அமுதம் போன்றவள் வாலியின் மனைவி என்ற பொருள் நயம் கொள்ள முடிகிறது. வாலிக்கு ஆலமும் தாரைக்கு அமுதமும் உவமையாவது நயம். வாயிடைப் புகைவர - கண்களில் தோன்றிய சினத்தீயால் உண்டாய புகை வாயிடமாக வெளிவந்தது என்க. முன் வாலிக்கு இடம் துடித்ததோடு (3946) இப்பொழுது தாரை இடை விலக்கலும் அவன் கேட்டிற்கு அறிகுறியாயின. 'கூந்தல் தீகின்றாள்' என்னும் தொடரால் தாரைக்குப் பின்னர் வர இருக்கும் அமங்கல நிலை முன்னரே சுட்டப்படுகிறது எனலாம். இள மூங்கில் மகளிர் தோளுக்கு உவமையாம். 22 | 3957. | 'விலக்கலை; விடு; விடு; விளித்துளான் உரம் கலக்கி, அக் கடல் கடைந்து அமுது கண்டென, உலக்க இன் உயிர் குடித்து, ஒல்லை மீள்குவல், மலைக் குல மயில்!' என, மடந்தை கூறுவாள்: |
மலைக்குல மயில்! -மலையில் வாழும் சிறந்த மயில் போன்ற வளே! விலக்கலை -என்னைத் தடை செய்யாதே; விடு விடு- என்னை விட்டுவிடு; அக்கடல் கடைந்து -அந்தப் பாற்கடலைக் கடந்து;அமுது கண்டென - அமுதை எடுத்தாற்போல;விளித்துளான் உரம் கலக்கி -என்னைப் போருக்கு அழைத்த அச்சுக்கிரீவனின் வலிமையைக் குலையச் செய்து;உலக்க இன் உயிர் குடித்து -(அவன்) அழகிய (அவனது) இனிய உயிரைப் பருகி; ஒல்லை மீள்குவல் -விரைவில் திரும்பி வருவேன்;என -என்று (வாலி) கூற;மடந்தை கூறுவான் -தாரை சொல்வாள். மயில் - உவமை ஆகுபெயராய்த் தாரையைக் குறித்தது. மயில் குறிஞ்சி நிலத்துப்பறவையாதலின், மலையில் வாழும் தாரைக்கும் ஏற்கும். மலைக்குல மயில் - அண்மைவிளி. விலக்கலை - எதிர்மறை ஏவல் வினைமுற்று; விடுவிடு- விரைவு பற்றி வந்த அடுக்குத் தொடர். உயிர் குடித்து - அச்செயலின் எளிமையைக் குறிக்கக் கூறப்பட்டது. உண்ணப்படாதது உண்ணப்படுவது போலச் சொல்லப்பட்டது மரபுவழுவமைதி. இலக்கணை என்றும் கூறலாம். அக்கடல் - அகரம் பண்டறிசுட்டு. 23 | 3958. | 'கொற்றவ! நின் பெருங் குவவுத் தோள் வலிக்கு இற்றனன், முன்னை நாள், ஈடு உண்டு ஏகினான்; பெற்றிலன் பெருந் திறல்; பெயர்த்தும் போர் செயற்கு உற்றது, நெடுந் துணை உடைமையால்' என்றாள். |
|