கொற்றவ - (தாரை வாலியை நோக்கி) வெற்றியை உடைய அரசனே! நின்பெருங் குவவுத் தோள் -உன்னுடைய பெருமை மிக்க திரண்ட தோள்களின்;வலிக்கு - வலிமைக்கு;முன்னைநாள் -முன்;இற்றனன் - வலிமை அழிந்து;ஈடு உண்டு ஏகினான் -வருத்தமுற்றுச் சென்றவனான சுக்கீவன்;பெருந்திறல் பெற்றிலன் -(நின்னை எதிர்த்துப் போர் செய்ய) பேராற்றலைப் புதிதாகப் பெற்றானில்லை;பெயர்த்தும் போர்செயற்கு - (அவ்வாறாக) மீண்டும் உன்னோடு போர்செய்வதற்கு;உற்றது -வந்துற்றமை; நெடுந்துணை உடைமையால்- பெரிய ஒரு துணையினைப் பெற்றமையாலாகும்;என்றாள் -என்று சொன்னாள். நாட்டையும் ஆளும் தகுதியும் திறலும் உடையவனாதலின் தாரை வாலியைக் 'கொற்றவ' என விளித்தாள். குவவு - திரட்சி; ஈடு உண்டு - வருத்தமுற்று. ஈடு - வருத்தம். 'ஈடினால் இருந்தெண்ணி' என்பது சிந்தாமணி (1762). நெடுந்துணை - துன்பம் மிக்க காலத்திலும் நீங்காது நெடிது நின்று உதவும் துணை; ஈண்டு இராமனைக் குறிக்கும். பெயர்த்தும் போர்செயற்கு உற்ற காரணத்தை ஊகித்தறியும் தாரையின் அறிவுத்திறன் ஈண்டு நோக்கத்தக்கது. 24 | 3959. | 'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு ஏன்று, உடன் உற்றன, எனக்கு நேர் எனத் தோன்றினும், தோற்று, அவை தொலையும் என்றலின் சான்று உள; அன்னவை - தையல்! - கேட்டியால்: |
தையல் -(அதற்கு வாலி) பெண்ணே! மூன்று என முற்றிய -மேல், கீழ், நடு என மூன்றாக வகுக்கப்பெற்றுள்ள;முடிவு இல் பேர் உலகு - எல்லையற்ற பெரிய உலகங்கள் யாவும்;ஏன்று உடன் உற்றன -தம்முள் இயைந்து ஒன்று சேர்ந்தனவாய்;எனக்கு நேர் என -எனக்குப் பகையாக; தோன்றினும் -எதிர்த்து வந்து தோன்றினாலும்;அவை தோற்றுத்தொலையும் -அவையெல்லாம்தோற்று அழியும்;என்றலின் - என்று கூறுவதற்கு;சான்று உள -சான்றுகள் பல உள்ளன;அன்னவை - அவற்றை;கேட்டி -கேட்பாயாக! தையல் - அழகுடையவள்; அண்மை விளி, உலகு - இடவாகுபெயரால் அங்குள்ள உயிர்களைக் குறித்தது. கேட்டி - முன்னிலை ஒருமை; ஆல் அசை வாலியின் போர்ச்செயலைக் கண்டு அறியும் வாய்ப்பில்லாதவளாய் கேள்வி மாத்திரத்தால் அறிந்தவளாதலின் 'கேட்டி' என வாலி உரைக்கலாயினன். 25 | 3960. | 'மந்தர நெடு வரை மத்து, வாசுகி |
|