பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 187

சிறந்த வரங்களிலும்;உரமும் -வலிமையிலும்;உள்ளதில் பாதியும் -
அவர்களிடம் உள்ளதில் சரிபாதி;என்னதால் -என்னுடையதாய் விடும்.
அதனால்;பகைப்பது எங்ஙனம் -அவர்கள் பகைமைகொண்டு என்னிடம்
போரிடுவது எவ்வாறு?நீ துயர் ஒழிக -(நான் போர்க்குச் செல்வது குறித்து)
'நீ துன்பம் அடைதலை நீக்குக';என நின்று கூறினான்-என்று நிதானித்துத்
தாரைக்கு ஆறுதல் மொழி கூறினான்.

     தனக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமையோடு தன்னை எதிர்ப்போரின்
வன்மையில் பாதியும் தனக்கு வந்து சேர்ந்துவிடுவதால் தன்னை
எதிர்க்கக்கூடியவர் எவரும் இல்லையென்று கூறித் 'துயர்அடைய வேண்டாம்'
எனத் தாரைக்கு வாலி ஆறுதல் கூறினான்.  பகைவர் வலிமையில் பாதி
பெறும் வரம் சிவபிரான் வாலிக்கு அளித்தது; 'அரங்கில் ஆடுவார்க்கு அன்பு
பூண்டு, உடை வரம் அறியேன்' (6177) என்றது காண்க.  இராவணன் இங்ஙனம்
பாதி வலிமை இழந்ததால் தோற்றதையும் 'என் வலி அவன் வயின் எய்த
வரங்கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற அடிகள் உணர்த்தும்.
எதிர்குவர் - கு, சாரியை; ஒழிகென (ஒழிக என) - தொகுத்தல்விகாரம்.   29

3964. அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

     அன்னது கேட்டவள் -அவ்வாறு வாலி சொல்லக் கேட்ட தாரை;
அரச -
(வாலியை நோக்கி) 'அரசே';இராமன் என்பவன் -இராமன்,
என்போன்;ஆயவற்கு -அந்தச் சுக்கிரீவனுக்கு;இன் உயிர் நட்பு
அமைந்து-
இனிய உயிர்த் துணைவனாகி;உன் உயிர் கோடலுக்கு -உனது
உயிரைக் கொள்வதற்கு;உடன் வந்தான் என -அவனுடன் வந்துள்ளான்
என்று;துன்னிய அன்பினர் -நம்மிடம் நெருங்கிய அன்புடையவர்கள்;
சொல்லினார் என்றாள் -
சொன்னார்கள் என்று சொன்னாள்.

     துன்னிய அன்பினர் சொல்லினார் - நமக்கு நன்மை புரியும் உண்மை
அன்புடையார் சிலர் சொல்லக் கேள்வியுற்றேன் என்று உரைத்தனள் தாரை.
இக்கூற்றால் தாரை அரசியல் அறிவு கொண்டவளாய் ஆங்காங்கு நடைபெறும்
நிகழ்ச்சிகளை அறிந்து வந்தனள் என்பது புலனாகிறது.  தன்னை எதிர்ப்பவர்
எவர் எனப் புறப்படும் வாலியிடம், மாற்றான் வலிமை குறைந்தவனாயினும்,
அவனுக்குத் துணையாகவரும் துணைவனது வலிமையை எண்ணித்
துணிந்தபின் போருக்குச் செல்லுதல் நன்று எனக்கூறும் தாரையின்
அரசியலறியும் ஈண்டு நினைக்கத்தக்கது. 'சொல்லினார்' என்பதால் செய்தியைத்
தீர விசாரித்துப் பின்னர்ச் செயற்பட வேண்டும் என அறிவுத்திறமும்
புலனாகின்றது.                                                  30