இருமையும் நோக்குறும் - இம்மை, மறுமை என்னும் இரண்டின் பயன்களையும் பார்க்கும்; இயல்பினாற்கு - இயல்பினையுடைய இராமனுக்கு; இது பெருமையோ - நீ கூறியபடி செய்வது பெருமையாகுமா? இங்கு இதில் பெறுவது என்கொலோ - இங்கு இவ்வாறு செய்வதில் அவன் அடையக் கூடிய பயன் யாதோ? அருமையின் நின்று - அடைதற்கரிய பொருளாய் நின்று; உயிர் அளிக்கும் - உலக உயிர்களைப் பாதுகாக்கும்; ஆறுடைத் தருமமே - நெறியுடைய தருமமே; தன்னைத் தான் தவிர்க்குமோ - தன்னைத்தானே அழித்துக் கொள்ளுமோ? இருவர்க்கிடையில் நடைபெறும் போரில் ஒருவர்க்கு உதவியாய் இருந்து மற்றொருவரைக் கொல்லுதலாகிய அறமல்லாத செயலை இராமன் செய்யமாட்டான் என்பது வாலியின் கருத்தாகும். இராமன் தருமமே உருவெடுத்து வந்தவனாதலின், தருமத்திற்கு மாறான செயல்களைச் செய்ய மாட்டான் என்பதால் 'தருமமே தவிர்க்குமோ தன்னைத்தான்' என்றான். 'அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான்' (1349) 'மெய்யற மூர்த்தி வில்லோன்' (5882) என்பன காண்க. தவிர்க்குமோ - ஓகாரம் எதிர்மறைப்பொருள். இது பெருமையோ - பெருமையைத் தருவதாகுமோ என்றது பழியையே தரும் என்பதைக் குறிப்பால் உணர்ந்தும். தருமமே - ஏகாரம் சிறப்பு; முன்பாடலில் இராமனை 'அறத்தின் ஆறெலாம் இழைத்தவன்' எனக் கூறிய வாலி இப்பாடலில் 'தருமமே' எனக் குறிப்பிடுகிறான். 32 | 3967. | 'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி. ஈன்றவள் மாற்றவள் ஏவ, மற்று, அவள்தன் மைந்தனுக்கு ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப் போற்றலை;இன்னன புகறல்பாலையோ?' |
ஏற்றபேர் உலகு எலாம்- தன் தந்தை ஏற்று ஆண்டு வந்த பெரிய உலகின் ஆட்சி முழுவதையும்; எய்தி - (அவன் அளிக்க) தனக்கு உரிமையாகப் பெற்று; ஈன்றவள் மாற்றவள் ஏவ - தன் தாய்க்கு மாற்றாள் ஆகிய கைகேயி கட்டளையிட; அவள்தன் மைந்தனுக்கு - அவளது மகனான பரதனுக்கு; ஆற்ற அரும் உவகையால் - தாங்குதற்கரிய மகிழ்ச்சியோடு; அளித்த ஐயனை - (நாட்டாட்சியை) அளித்த பெரியோனாகிய இராமனை; போற்றலை - புகழ்ந்து பாராட்டாமல்; இன்னன - இத்தகைய பழிமொழிகளை; புகறல் பாலையோ - கூறத்தகுவையோ? மூத்த மைந்தன் என்ற உரிமையால் நாடு பெற்றதால் 'எய்தி' என்றான். கைகேயியின் கொடுமை காரணமாக அவள் பெயரைக் கூற விரும்பாத வாலி 'மாற்றவள்' எனக் குறிப்பிடுகிறான். ஈன்றவள் - கோசலை; மாற்றவள்தன் மைந்தன் - கைகேயியின் மகன் பரதன். ஆற்றரும் உவகையால் அளித்தது - 'பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?' (1604) என்ற இராமன் கூற்றாலும் ''இப்பொழுது எம்மனோரால்'' 'தெருளுடை மனத்து மன்னன்' (1602, 1603) எனத் தொடங்கும் பாடல்களாலும் அறியலாம். 'பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி' என்றார் குலசேகரர். (பெருமாள்திருமொழி-8-5) 33 |