பக்கம் எண் :

196கிட்கிந்தா காண்டம்

தரும நெறி கெட;தேற்றாது செய்வார்களை -தெளிவு பெறாது தீய
காரியங்களைச் செய்பவர்களை;தேறுதல் செவ்விது அன்று -நம்புதல்
நன்மை தருவதாகாது;தம் முனை -தன் தமையனையே;மாற்றான் என -
பகைவன் என்று கொண்டு;கொல்லிய வந்து நின்றான்- கொல்லும்
பொருட்டு வந்து நின்றுள்ள சுக்கிரீவன்;வேற்றார்கள் திறத்து -
(உறவினரல்லாத) அயலால் திறத்தே;இவன் தஞ்சம் என் -உற்ற
துணையாதல் எவ்வாறு?'என்றான் -என்று கேட்டான்.

     தமையனையே கொல்லத் துணிந்தவன், உறவல்லாத அயலார்க்கு
எங்ஙனம் துணையாவான் என்பதாலும், நமபிக்கைக்கு மாறான செயலைத் தன்
தமையனுக்குச் செய்பவன் பிறர்க்கு நல்லது செய்யான் என்பதாலும்
சுக்கிரீவனை நம்பக்கூடாது என்பது இலக்குவன் கருத்தாகும்.  'ஆற்றாது'
என்னும் சொல் இலக்குவனது சகோதர பாசத்தையும், நேர்மையான
போர்நெறியினையும் உணர்த்தும்.  அறத்தை நிலை நாட்டும் வீர நெறியையே
இராமன் பின்பற்றுவான் ஆதலின் அவனை 'வீர' என விளித்தான்.  கூட்டு
ஒருவரையும் வேண்டாக் கொற்றவனாகிய உனக்கு இப்படி ஒரு துணை
வேண்டுமா என்ற கருத்தொரு 'வீர' என விளித்தான் என்றும் கொள்ளலாம்.

     முனை - முன்னை என்பதின் இடைக்குறை.  கொல்லிய - எதிர்கால
வினையெச்சம்.                                               42

இராமன் மறுமொழி

3977.'அத்தா! இது கேள்' என,
      ஆரியன் கூறுவான், 'இப்
பித்து ஆய விலங்கின்
      ஒழுக்கினைப் பேசல் ஆமோ?
எத் தாயர் வயிற்றினும்,
      பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால், பரதன் பெரிது
      உத்தமன் ஆதல் உண்டோ?

     அத்தா -'ஐயனே!இது கேள் என -இதனைக் கேட்பாயாக' என்று;
ஆரியன் கூறுவான் -
மேலோனாகிய இராமன் (இலக்குவனை நோக்கி)
பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்;பித்து ஆய இவ் விலங்கின் -
(மக்கள் ஒழுக்கம் குறித்துப் பேசுவது போல) பைத்தியம் கொண்டது போன்ற
விவேகமில்லாத இவ்விலங்குகளின்;ஒழுக்கினைப் பேசலாமோ -ஒழுக்க
முறையை ஒரு பொருட்டாகப் பேசலாகுமா?எத்தாயர் வயிற்றினும் -
(விலங்கினம் சார்ந்த சுக்கிரீவன் கிடக்க.  மனிதரான உடன் பிறந்தாருள்ளும்)
எத்தகைய தாயார் வயிற்றிலும்;பின் பிறந்தார்கள் எல்லாம் -பின்னர்ப்
பிறந்த தம்பியரெல்லாம்;ஒத்தால் -(தம் தமையன் மாரிடத்து அன்பும்
பணிவும் கொள்வதில்) ஒரே மாதிரியானவராக நடப்பராயின்;பரதன் பெரிது
உத்தமன் -