பக்கம் எண் :

வாலி வதைப் படலம் 203

 புண்மேல் இரத்தம் பொடிப்ப,
     கடிப்பார், புடைப்பார்.

     விண் மேலினரோ - (போர்புரியும் வாலி சுக்கிரீவர்) வானத்தில் மேல்
உள்ளனரோ? நெடுவெற்பின் முகட்டினாரோ -நீண்டுயர்ந்த மலைகளின்
சிகரங்களில் உள்ளனரோ?மண் மேலினரோ -நிலவுலகத்தில் உள்ளனரோ?
புறமாதிர வீதியாரோ -புறத்தேயுள்ள திசைகளின் எல்லையில் உள்ளனரோ?
கண் மேலினரோ -
(அல்லது நமது) கண்களில் உள்ளனரோ? என யாவரும்
காண நின்றார் -
என்று எல்லோரும் காணும்படியாக எங்கும் திரிந்து
நின்றவர்களாய்;புண்மேல் இரத்தம் பொடிப்ப -(அவர்கள்) உடல்களில்
புண்கள் உண்டாகி அவற்றின் மேல் குருதி சிந்துமாறு;கடிப்பார்
புடைப்பார்-
ஒருவரையொருவர் கடிப்பாரும் குத்துவாரும் ஆனார்கள்.

     அவ்வாலி சுக்கிரீவர் விண்மீதும், மலைகள்மீதும், திசைகளிலும்
எல்லைகளிலும் சென்ற பொருதனர்; ஓரிடத்தில் இல்லாது பல இடங்களில்
சுழன்று திரிந்து போர் செய்ததால், பார்ப்பவர் கண்கள் பட்ட இடங்களில்
எல்லாம் காணப்பட்டனர்.  அதனால் 'கண்மேலினரோ' என ஐயம்
கொள்ளுமாறு போர் செய்தனர் என்றார்.  அவர்கள் மிக்க விரைவோடு பல
இடங்களுக்குச் சென்று போர் புரிந்தனர் என்பதை முதல் மூன்றடிகளால்
உணரலாம். புடைத்தல் - கையினால் தாக்குதல்.                      51

3986. ஏழ் ஒத்து, உடன் ஆம்
     திசை எட்டொடு இரண்டும் முட்டும்,
ஆழிக் கிளர் ஆர் கலிக்கு
      ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை;
பாழித் தடந் தோளினம்
      மார்பினும் கைகள் பாய,
ஊழிக் கிளர் கார் இடி
      ஒத்தது, குத்தும் ஓதை.

     ஆர்ப்பின் ஓசை -(அவ்விருவரும்) ஆரவாரித்து எழுப்பிய பேரொலி;
ஏழ் ஒத்து உடன் ஆம் -
ஏழு கடல்களும் ஒருங்கு சேர்ந் தனவாய்;திசை
எட்டொடு இரண்டும் முட்டும் -
எட்டும் இரண்டுமாகிய பத்துத்திசைகளில்
மோதும்போது;ஆழிக்கிளர் ஆர்கலிக்கு -கடல்களில் உண்டாகின்ற
பேரொலிக்கு;ஐம்மடங்கு -ஐந்து மடங்கு மிக்கு ஒலிப்பதாயிற்று;பாழித்
தடந்தோளினும் -
வலிமை பொருந்திய பெரிய தோள்களிலும்;மார்பினும் -
மார்பிலும்;கைகள் பாய - கைகள் விரைந்து செல்லுமாறு;குத்தும் ஓதை -
(ஒருவரையொருவர்) குத்துதலால் ஏற்படும் ஓசை;ஊழிக்கிளர் -யுகமுடிவில்
(உலகை அழிப்பதற்கு) எழுகின்ற;கார் இடி ஒத்தது -கருமேகங்களின் இடி
முழக்கத்தை ஒத்திருந்தது.