மலையிலுள்ள குகை என்னும்படி; தொளைப்பர் -அழமாகத் துளைப்பார்கள். எறிந்தென - எறிந்தது + என; இது தொகுத்தல் விகாரம் உகிருக்கு வேல் உவமை. 57 | 3992. | மண்ணகத்தன மலைகளும், மரங்களும், மற்றும் கண்ணகத்தினில் தோன்றிய யாவையும், கையால், எண் நகப் பறித்து எறிதலின், எற்றலின், இற்ற, விண்ணகத்தினை மறைத்தன; மறி கடல் வீழ்ந்த. |
மண்ணகத்தன மலைகளும்- நிலத்தில் இருப்பனவாகிய மலை களையும்;மரங்களும் -மரங்களையும்;மற்றும் கண்ணகத்தில் தோன்றிய - மேலும் கண்களில் பட்ட;யாவையும் -எல்லாப் பொருள்களையும்;கையால்- (அவர்கள்) தத்தம் கைகளால்;எண் நகப் பறித்து எறிதலின் -வலிமை விளங்கப் பெயர்த்தெடுத்து வீசி எறிந்ததனாலும்;எற்றலின் -(அவற்றால்) தாக்கியதாலும்;இற்ற -(அம்மலை முதலியன) முறிந்தவனாய்; விண்ணகத்தினை மறைத்தன-விசும்பிடத்தை மறைத்தன;மறிகடல் வீழ்ந்த- மேலும் மடங்கி விழும் அலைகளை உடைய கடலில் அவை வீழ்ந்தன. எண் - ஈண்டு உள்ளத்தின் திண்மையைக் குறித்து நின்றது. பறித்தல் - வேருடன் பெயர்த்தெடுத்தல். வானமெங்கும் பரவி நிறைதலால் 'விண்ணகத்தினை மறைத்தன' என்றார். 'மண்ணகத்தன' என்பதை மரங்களுக்கும் இயைக்கலாம். கண் அகத்தில் - கண் முன்னிலையில் என்றபடி. 58 | 3993. | வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்; வேறு என்னை விளம்பல்? ஒருவர்க்கு ஆண்டு அமர், ஒருவரும் தோற்றிலர்; உடன்று செருவில் தேய்த்தலின், செங் கனல் வெண் மயிர்ச் செல்ல, முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவர். |
ஆண்டு அமர் -அப்பொழுது நடந்த போரில்;ஒருவர்க்கு ஒருவரும் தோற்றிலர் -ஒருவர் மற்றொருவர்க்குத் தோல்வி அடையாதவராய்;உடன்று செருவில் தேய்த்தலின் -கடுமையாக எதிர்த்துப் |