மாருதியை நோக்கி -அதற்குப் பிறகு (இராமன்) அனுமனைப் பார்த்து; 'பேர் எழில் வீர -மிக்க அழகையுடைய வீரனே;நீயும் -நீயும் (சென்று); அன்னவன் அரசுக்கு ஏற்றது -அச்சுக்கிரீவனது அரசாட்சிக்கு ஏற்ற காரியங்களை;அறிவின் ஆற்றுதி -உன் அறிவினால் செய்வாயாக; என்றான்-என்று சொன்னான். அ - பண்டறி சுட்டு; அனுமன் அழகு மிக்கவன் என்பதால் 'பேர் எழில் வீர' என விளித்தான். அனுமனுக்குச் சுந்தரன் என்னும் ஒரு பெயர் உண்டு. உருவ அழகு, வீரம், அறிவு ஆகிய மூன்றிலும் அனுமன் சிறந்தவன் என்பதை இராமன் கூற்றால் அறிய முடியகிறது. 27 மாருதி, 'இங்கிருந்து அடிமை செய்வேன்' எனல் 4142. | பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியானும், 'இத் தலை இருந்து, நாயேன், ஏயின எனக்குத் தக்க கைத் தொழில் செய்வேன்' என்று, கழல் இணை வணங்கும் காலை, மெய்த் தலை நின்ற வீரன், இவ் உரை விளம்பி விட்டான்: |
பொய்த்தல் இல் உள்ளத்து -பொய்ம்மை இல்லாத மனத்தில்;அன்பு பொழிகின்ற புணர்ச்சியானும் -அன்பைப் பொழிகின்ற நட்பை உடையவனான அனுமனும்;நாயேன் -(இராமனது நோக்கி) நாய் போன்றவனான அடியேன்;இத்தலை இருந்து -இவ்விடத்திலேயே தங்கி; ஏயின -(உன்னால்) ஏவப்பட்டனவும்;எனக்குத் தக்க -எனது ஆற்றலுக்கு ஏற்றனவுமான;கைத்தொழில் செய்வேன் என்று -குற்றேவல்களைச் செய்வேன் என்று கூறி;கழல் இணை வணங்கும் காலை - இராமனது கழலணிந்த இரண்டு திருவடிகளையும் வணங்கிய பொழுது;மெய்த்தலை நின்ற வீரன் -உண்மையின் கண் நிலைத்து நின்ற வீரனான இராமன்; இவ்வுரை விளம்பிவிட்டான் -(பின்வரும்) இந்த வார்த்தைகளைக் கூறலானான். பொய் கருதாமை, அன்புடைமை ஆகிய அனுமனின் சிறப்பியல்புகள் இங்குக் கூறப்பட்டன. ''நீதியில் நின்றீர்; வாய்மை அமைந்தீர்'' (4725); 'அண்ணல் அம்மைந்தர்க்கு அன்பு சிறந்தீர்' (4726) என்ற சாம்பன் கூற்றும் ''சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய்'' (5422) என்ற சீதையின் கூற்றும் காண்க. 'நாயேன்' என்றதனால் அனுமனின் அடிமைத்திறமும், 'ஏயின செய்வேன்' என்றதால் கட்டளை மறுக்காமையும், 'எனக்குத்தக்க கைத்தொழில்' என்றதால் பணியும் கூறப்பட்டன. 'ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின் ஆற்றல் உண்டே?' (4801), ''யான் அவர்தம் பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்; ஏவல் கூவல் பணி செய்வேன்.'' (5341) என்பன அனுமன் கூற்றுக்களாம். கைத்தொழில் - குற்றேவல்; கை = சிறுமை கைங்கரியம் என்ற வடசொல்லின் அமைதி பொருந்துதல் காண்க. 28 |