பக்கம் எண் :

318கிட்கிந்தா காண்டம்

அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு இராமன் வற்புறுத்தல்

4143. 'நிரம்பினான் ஒருவன் காத்த நிறை
      அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை, மற்று ஓர்
      தலைமகன் வலிதின் கொண்டால்,
அரும்புவ, நலனும் தீங்கும்;
      ஆகலின், ஐய! நின்போல்
பெரும் பொறை அறிவினோரால்,
      நிலையினைப் பெறுவது அம்மா.

     நிரம்பினான் ஒருவன் -அரசர்க்குரிய பண்புகள் நிறைந்த ஒப்பற்ற
மன்னன் ஒருவன்;காத்த -பாதுகாத்த;இறுதி நின்ற வரம்பு இலாதது -
கடை எல்லை இல்லாததும்;நிறை அரசு அதனை - எல்லாச் செல்வ
வளங்களும் நிறைந்ததுமான அரசாட்சியை;மற்று ஓர் தலைமகன் -வேறு
ஓர் அரசன்;வலிதின் கொண்டால் -வலியக் கைப்பற்றிக் கொண்டால்;
நலனும் தீங்கும் அரும்புவ -
(அந்த அரசியலில்) நன்மைகளேயன்றித்
தீமைகளும் தோன்றுவனவாம்;ஆகலின் -ஆதலால்;ஐய -ஐயனே;
நின்போல் பெரும்பொறை அறிவினோரால் -
(அத்தகைய ஆட்சி)
உன்னைப் போன்ற பொறுமையும் அறிவும் நிறைந்தவர்களாலேயே;
நிலையினைப் பெறுவது -
நிலை பெறக் கடவதாகும்.

     நிரம்பினான்: அரசர்க்கு இன்றியமையாதனவாகக் கூறப்படும் அஞ்சாமை,
ஈகை, அறிவு; ஊக்கம், கல்வி, வீரம் முதலிய நற்பண்புகள் நிரம்பப்பெற்றவன்.
நிறை அரசு - பல்வேறு வளங்களுடன், பல சிறப்புகளுடன் கூடிய அரசு.
வள்ளுவர் குறிப்பிடும் 'இறைமாட்சி, நாடு' அதிகாரக் கருத்துக்களை இங்கே
கொள்ளலாம்.  'நிரம்பினான்' - ஈண்டு வாலியைக் குறித்தது; 'மற்றோர்
தலைமகன்' சுக்கிரீவனைக் குறித்தது.  இறுதி நின்ற வரம்பு - அழிவு, முன்
பாடலில் அனுமனின் பொய்யில் உள்ளத்தையும், அன்பையும் கூறியவன்
இப்பாடலில் அவனது பொறுமையினையும், அறிவையும் உரைத்து அரசியலுக்கு
அவனது இன்றியாமையினை உணர்த்தினான், ''வெஞ்சின் அரக்கர் ஐவர்
புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவை ஒத்தான்'' (5664) எனப்பின்னரும்
அனுமன் புகழப்படுவதைக் காணலாம.                               29

4144. 'ஆன்றவர்க்கு உரியது ஆய
     அரசினை நிறுவி, அப்பால்,
ஏன்று எனக்கு உரியது ஆய
      கருமமும் இயற்றற்கு ஒத்த
சான்றவர், நின்னின் இல்லை;
      ஆதலால், தருமம்தானே
போன்ற நீ, யானே வேண்ட,
      அத் தலை போதி' என்றான்.