ஆட்சி செய்தலாகக் கொண்டனன் என்பதும் பாடலின் இறுதி இரண்டடிகள் உணர்த்துகின்ற செய்திகளாகும். வாலி இறக்கும் நிலையில் சுக்கிரீவனுக்குச் சில அறிவுரைகளைக் கூறியது வாலிவதைப் படலத்தில் கூறப்பட்டது. அவ்வுறுதி மொழிகளைத் தலைமேற்கொண்டு சுக்கிரீவன் ஆட்சி புரிந்தான் என்க. மானத்துணைவர் - ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் மற்றும் மந்திரச் சுற்றத்தாருமாவர். அவர்கள் எல்லாச் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தமை பற்றி 'மானத்துணைவர்' எனப்பட்டனர். கம்பர் கூறும் அமைச்சர் மாண்புகளை 1318 - 1321 - எண் பாடல்களில் காண்க. அமைச்சர் முதலியோர் உறுதிச்சுற்றம் எனப் படுவராதலால், அவர்கள் உரிய சமயங்களில் வந்து சூழ்ந்து உதவுதலை 'மானத் துணைவர் சுற்ற' என உரைத்தார். 'சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்' (குறள் - 445) என்றார் வள்ளுவர். சுற்றம் தழுவி வாழ்தல் செல்வம் படைத்ததன் பயனாதலாலும், செல்வம் பெருக்கவும் காக்கவும் வேண்டியிருத்தலானும் 'கிளை சுற்ற' என்றார். சுக்கிரீவனின் பண்பால் சுற்றத்தினார் அவனைத் தழுவி வாழ்ந்தனர் என்க. வான்மீகத்தில் தாரை சுக்கிரீவனோடு வாழ்ந்தாள் என்று கூறப் பெற்றிருக்க, அவளைத் தாயாகச் சுக்கிரீவன் கருதினான் எனக் கம்பர் கூறியிருப்பது போற்றத் தக்கதாகும். அத்யாத்மராமாயணம், தாரை இராமன் உபதேசம்பெற்று வாலியின் மறைவால் நேர்ந்த மனத்தளர்ச்சி நீங்கி, மெய்ஞ்ஞானம் அடைந்து ஜீவன் முக்தி நிலையடைந்தாள் என்று கூறுகிறது. 32 4147. | வள அரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும் கிளைஞரின் உதவ, ஆணை கிளர் திசை அளப்ப, கேளோடு, அளவு இலா ஆற்றல் ஆண்மை அங்கதன், அறம் கொள் செல்வத்து இளவரசு இயற்ற, ஏவி, இனிதினின் இருந்தான், இப்பால், |
வள அரசு எய்தி -எல்லா வளங்களும் பொருந்திய அரசாட்சியை அடைந்து;மற்றை வானர வீரர் யாரும் -மற்ற வானர வீரர்கள் யாவரும் கிளைஞரின் உதவ -சுற்றத்தார் போல வேண்டுவன செய்ய;ஆணை கிளர் திசை அளப்ப -(தனது) அரச ஆணை விளங்குகின்ற திசைகளின் எல்லையை அளாவவும்;அளவு இலா ஆற்றல் -அளவற்ற வலிமையும்; ஆண்மை அங்கதன் -வீரமும் உடைய அங்கதன்;கேளோடு - உறவினரோடு;அறம் கொள் செல்வத்து -அறவழியில் ஈட்டப்பட்ட செல்வத்தோடு;இளவரசு இயற்ற -இளவரசனாக ஆட்சி புரியுமாறு;ஏவி - கட்டளையிட்டு;இனிதினின் இருந்தான் -இனிமையாகக் கிட்கிந்தை நகரத்தில் வீற்றிருந்தான். இப்பால் -(அஃது அங்ஙனமாகவும்) இப்புறத்தில். . சுக்கிரீவன் செய்தியை இவ்வாறு கூறி, மேல் இராமன் செய்தியைக் கூறுகின்றார். ஆதலின் வேறுபாடு தோன்ற 'இப்பால்' என்றார். ஆணை கிளர் திசை |