பக்கம் எண் :

324கிட்கிந்தா காண்டம்

கூறிக் கலங்க, இலக்குவன் மேலும் பல தேறுதல் வார்த்தைகளைப் புகன்றான்.
களவு செய்தவன் உறையுள் காணும் காலம் வந்து சேர்வதாயிற்று என்றும்,
உற்ற துணையொடு பல்முறை தெளிந்து காலத்தால் செயல்பட்டால் வெற்றி
தவறுதல் இல்லையென்றும், தீய வழியில் செல்பவர் பழியும் தோல்வியும் எய்த,
நல்வழியில் நடக்கும் இராமனே புகழும் வெற்றியும் பெறுவான் என்றும்
இலக்குவன் உரைத்தான்.

     இலக்குவன் கூறியதை இராமன் உறுதியென உணர்ந்தான்.
கதிர்ப்பருவமும் ஒருவாறு தேய்ந்து முடிவுற்றது.  மேகங்கள் வெண்ணிறம்
உற்றன.  இருள் நீங்கியது.  இடி முழக்கம் ஒழிய, மழைத்துளிகள் நீங்க,
மின்னலும் மறைந்தது.  அருவிகளில் நீர் குறைந்தது.  சந்திரன் ஒளியுடன்
வெளிப்பட்டான்.  அன்னப்பறவைகள் வானத்தில் பறந்தன.  தெளிந்த
நீர்நிலைகளில் மகளிர் கண்களென மீன்கள் துள்ளின.  தாமரை, செங்கிடை
அரும்புகள் மலர்ந்தன.  தவளைகள் குரல் அடங்க, மயில்களும் ஒடுங்கின.
பாக்குக் குலைகள் பழுத்தன.  முதலைகள் வெயிலில் இனிமையாக உறங்க,
நந்தைகள் சேற்றில் மறைந்தன.  நண்டுகள் வளைகளில் புகுந்து வாயிலைச்
சேற்றால் அடைத்துக் கொண்டன.

     இப்படலத்தின் வழி புலனாகும் கம்பரின் இயற்கையைப் பற்றிய
நுண்ணறிவும், வருணனைத் திறமும் பெரிதும் பாராட்டுதற்குரியன.  கதைப்
பகுதியினும் வருணனைப் பகுதி மிக்கிருப்பதும் காணத்தக்கது.

கதிரவன தென்திசை ஏகல்

கலிவிருத்தம்

4148. மா இயல் வட திசைநின்று,  வானவன்,
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய, முந்தி, தென் திசைக்கு
ஏவிய தூது என, இரவி ஏகினான்.

     ஓவியமே என -ஓவியத்தில் தீட்டிய உருவமே போல;ஒளிக் கவின்
குலாம் -
ஒளி பொருந்திய அழகுடன் விளங்கும்;தேவியை நாடிய -(தன்
மனைவியான) சீதாதேவியைத் தேடும் பொருட்டு;முந்தி -(அனுமன் முதலிய
வானரவீரர்களை) அனுப்புவதற்கு முன்னரே;வானவன் -
தேவர்களுக்கெல்லாம் தேவனான இராமன்;தென்திசைக்கு ஏவிய -தெற்குத்
திசை நோக்கி அனுப்பிய;தூது என -தூதுவன் என்னுமாறு;இரவி -
கதிரவன்;மா இயல் வடதிசை நின்று- பெருமை பொருந்திய வடக்குத்
திசையிலிருந்து;ஏகினான் -தென்திசை நோக்கிச் சென்றான்.

     வடதிசையைப் பெரியதிசை, மங்களத்திசை, புண்ணியத் திசை என்று
கூறுவதால் 'மாஇயல் வடதிசை' என்றார்.  சூரியன் தென்திசையாக ஒதுங்கிச்
செல்லுதலை தட்சிணாயனம் என்பர்.  ஆடிமாதம் முதல் மார்கழி ஈறாக உள்ள
ஆறு மாதங்களும் இதன்கண் அடங்கும்.  இங்குக் கார்காலத்திற்குரிய
தென்திசை அயனம் தொடங்கியது என்பதாம்.  தட்சிணாயனத்தில்
இயல்பாகவே வடதிசையிலிருந்து தென்திசை செல்லும் சூரியனை, இராமன் தன்
தேவியைத் தேடத் தென்திசைக்குத் தூது என ஏவினான் எனக்கூறியது
தற்குறிப்பேற்ற அணியாகும்.  பின்னர் அனுமன் தென்திசை நோக்கிச்
செல்வானாதலின், கதிரவன் முந்திச் சென்ற தூது போன்றவனானான்.