2. அனுமப் படலம் அனுமன் இராமனைச் சந்தித்த வரலாற்றைக் கூறுவது அனுமப்படலமாகும். இராமலக்குவர் வருவதைக் கண்ட சுக்கிரீவன் அஞ்சி ஓடி ஒளிந்தான். அனுமன் அவனுக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறி, மாணவ வடிவம் கொண்டு, இராமலக்குவரை அணுகி மறைந்து நின்று, அவர்கள் நிலையை உய்த்துணர்ந்தான். 'இவர்களே தருமம்' என்று துணிந்ததும் அவர்களை அடைந்து சுக்கிரீவனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் உரைக்க, இலக்குவனும் தங்கள் நிலையை உரைத்தான். அனுமன் தன் பேருருவைக் காட்ட, இராமன் அனுமனைப்பற்றி இலக்குவனிடம் வியந்து பேசினான். சுக்கிரீவனை அழைத்துவர அனுமன் விடை பெற்றுச் சென்றான். இராமலக்குவரைக் கண்ட சுக்கிரீவன் ஓடி ஒளிதல் கலிவிருத்தம் 3751. | எய்தினார், சவரி, நெடிது, ஏய மால் வரை எளிதின்; நொய்தின் ஏறினர், அதனின்; நோன்மை சால் கவி அரசு, செய்வது ஓர்கிலன்; அனையர் தெவ்வர் ஆம் என வெருவி, 'உய்தும் நாம்' என, விரைவின் ஓடினான், மலை முழையின். |
எய்தினார் -காடும் மலையும் கடந்து சென்ற இராமலக்குவர்; சவரி நெடிது ஏய - சபரி என்பவள் விரிவாக வழிசொல்லி அனுப்பிய;மால்வரை- பெரிய ருசியமுகம் என்னும் மலைமீது;எளிதின் நொய்தின் ஏறினர்- எளிதில் விரைவாக ஏறிச் சென்றனர்;அதனின் - அம்மலையில் இருந்த; நோன்மை சால்கவி அரசு -வலிமை மிக்க குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவன்;அனையர் தெவ்வர் ஆம் என - வருகின்ற இவர்கள் நம் பகைவராவர் என்று;வெருவி -அஞ்சி;செய்வது ஓர்கிலன்- செய்வது இன்னதென்று அறியாதவனாய்;'உய்தும் நாம்' என -'நாம் இப்பொழுது தப்பிப் பிழைப்போம்' என்று கருதி;மலை முழையின்-அம்மலையின் குகை ஒன்றினுள்;விரைவின் ஓடினான் -வேகமாய் ஓடினான். |