4263. | செறி புனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து, உறு துணைக் கால் மடுத்து ஓடி, ஓத நீர் எறுழ் வலிக் கணவனை எய்தி, யாறு எலாம், முறுவலிக்கின்றன போன்ற, முத்து எலாம். |
முத்து எலாம் -சிப்பிகள் ஈன்ற முத்துக்களெல்லாம்;செறி புனல் பூந்துகில் -செறிந்த நீரிடைக் காணப்படும் மலர்களாகிய ஆடையினை; திரைக்கையால் திரைத்து -அலைகளாகிய கரங்களால் தூக்கிக் கொண்டு; உறுதுணைக் கால் -பொருந்திய துணையாயுள்ள கால்களை;மடுத்து ஓடி - பதித்து ஓடிச் சென்று;யாறு எலாம் -யாறுகளாகிய பெண்கள் எல்லாம்; ஓதநீர் -கடல்நீராகிய;எறுழ்வலிக் கணவனை -மிக்க வலிமை பொருந்திய கணவனை;எய்தி -அடைந்து;முறுவலிக்கின்ற போன்ற -புன்முறுவல் செய்வதைப் போன்றிருந்தன. கடலில் சங்கமத் துறைகளில் சிப்பிகளினின்று முத்துக்கள் உண்டாதலும், அலை கூதிர்ப்பருவ இறுதியில் கடலின் அலைகளால் கொழிக்கப்பட்டுக் கடலோரத்தில் விளங்குவன என்பதும் இயல்பாகும். இவ்வியல்பான நிகழ்ச்சியை ஆறுகளாகிய மகளிர் தம் கடலாகிய கணவனைச் சேர்ந்து முத்துக்களாகிய பற்களைக் காட்டிச் சிரித்தன போல் இருந்தது எனக் கூறினார். தற்குறிப்பேற்ற உவமை அணி. ஆற்று நீரில் மிதந்து வரும் மலர்களையே ஆடையாகக் கூறுதல் கவி மரபாகும். 'புண்ணிய நறுமலராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி' (சிலப். 13 - 172 - 173); ''மணிப்பூவாடை அது போர்த்து'' (சிலப். கானல்வரி - 25) என்பனவும் காண்க. ஓடுகிறவர்கள் தம் ஆடைகள் தடுக்காமலிருக்க அதனைத் தூக்கி மடித்துக் கொள்ளல் இயல்பாதலின் ஆறும் பூந்துகிலைத் 'திரைக் கையால் திரைத்து' ஓடியதாகக் கூறப்பட்டது. ஆறு புறப்படும் இடத்தைத் தலையாகக் கூறுதல் போல, அது கடலோடு கலக்கும் இடத்தைக் காலாகக் கூறும்பொருத்தம் நோக்கி்க் 'கால்மடுத்து ஓடி' என்றார். 'மலைத் தலைய கடற்காவிரி' (பட்டினப்பாலை - 6) என்ற இடத்து ஆற்றின் 'தலைப் பகுதி' யைக் காணலாம். ஆற்றுக்கால் என்ற வழக்கும் காண்க. ஆற்றின் அலைகளைக் கரங்களாகக் கூறுவதுண்டு. 'பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் பொன்னரங்கம்' (திவ்விய பெருமாள் - 1 - 1). எறுழ்வலி - ஒரு பொருட்பன்மொழி. வடிவிலும், வெண்ணிறத்திலும் ஒளியிலும் பற்களுக்கு முத்து உவமையாகும். ஓத நீர்க் கணவன் என்று ஒன்றை உருவகம் செய்து ஆறுகளாகிய மகளிர் என உருவகம் செய்யாதது ஏகதேச உருவகம் எனப்படும். ஆறுகட்குக் கடல் கணவன் என்பது மரபு; அதனால கடலுக்கு நதிபதி என்னும் பெயருண்டு. 116 4264. | சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின், |
|