விரைந்து சென்று;சேண் உயர் கிட்கிந்தை -மிக உயர்ந்த கிட்கிந்தை மலையை;சேர்ந்தவன் -அடைந்தவனான இலக்குவன்;குன்றினின்று -ஒரு மலையிலிருந்து;ஒரு குன்றினில் குப்புறும் -மற்றொரு மலையில் தாவிப் பாய்கின்ற;பொன்துளங்கு -பொன்னிறத்தோடு விளங்கும்;உளைச் சீயமும் -பிடரி மயிரினையுடைய ஆண் சிங்கத்தையும்; போன்றனன் -ஒத்து விளங்கினான். வலிமையிலும், பெருமித நடையிலும் தோற்றத்திலும் சிங்கம் இலக்குவனுக்கு உவமையாகும். தட்டுத்தடங்கல் இல்லாமல் குறித்த இடத்திற்கு விரைந்து சென்று சேர்வதால் இலக்குவனுக்கு இராமபாணம் உவமையாயிற்று. குப்புறுதல் - குதித்தல். சேண் உயர் - ஒரு பொருட்பன்மொழி. 15 வானரர் அங்கதனுக்குச் செய்தி அறிவித்தல் 4284. | கண்ட வானரம் காலனைக் கண்டபோல் மண்டி ஓடின; வாலி மகற்கு, 'அமர் கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான், சண்ட வேகத்தினால்' என்று, சாற்றலும், |
கண்ட வானரம் -(கோபத்தோடு இலக்குன் வருவதைப்) பார்த்த வானரங்கள்;காலனைக் கண்டபோல் -இயமனைக் கண்டது போல (அச்சம் கொண்டு);வாலி மகற்கு -வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி; மண்டி ஓடினர் -நெருக்கி்க் கொண்டு ஓடி;அமர் கொண்ட சீற்றத்து - போரினை மனங்கொண்ட கோபத்துடன்;இளையோன் சண்ட வேகத்தினால் - இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு;குறுகினான் - வந்து சேர்ந்துள்ளான்;என்று சாற்றலும் -என்று சொன்ன அளவில். கோபம் கொண்டவனாக மோதவரும் இலக்குவன் காணப்பட்டதால் அவன் 'அமர்கொண்ட சீற்றத்து இளையோன்' எனப்பட்டான். மண்டியோடுதல் - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தடித்துக்கொண்டு ஓடுதல். 16 அங்கதன் சுக்கிரீவனிடத்திற்கு போதல் 4285. | அன்ன தோன்றலும், ஆண் தொழிலான் வரவு இன்னது என்று அறிவான், மருங்கு எய்தினான்; மன்னன் மைந்தன் மனக் கருத்து உட் கொளா, |
|