பக்கம் எண் :

கிட்கிந்தைப் படலம் 495

கூறுவதற்கும் என் நாத் துணியவில்லை என்று சுக்கிரீவன் தன்செயலுக்கு
வருந்திக் கூறுகின்றான் என்பது.

     ஓர் உதவியும் தான் செய்யாதிருந்த போதும் தனது பகையைப் போக்கி,
மனைவியைத் தன்னிடம் சேர்த்து அரசபோகத்தையும் அருளிய கருணை
நோக்கிச் சுக்கிரீவன் இராமனை 'வள்ளியோய்' என்றான்.  மதுவுண்டு
களிக்கும் குரங்கின் இயல்பும், போகத்திலேயே ஆழ்ந்து கிடக்கும் எண்ணமும்,
கைம்மாறு செய்வதற்கு விரைந்து நில்லாத நினைவும், என்பான் 'இயல்பும்
எண்ணமும் நினைவும்' என்றான்.                                 132

இராமன் பாராட்டுதல்

4401. திரு உறை மார்பனும்,
      'தீர்ந்ததேயும் வந்து
ஒருவ அருங் காலம்,
      உன் உரிமையோர் உரை -
தரு வினைத்து ஆகையின்,
      தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ!
     இனையன, பகரற்பாலையோ?'

     திரு உறை மார்பனும் -திருமகள் எப்பொழுதும் தங்கியுள்ள
மார்பையுடைய இராமனும்;ஒருவ அருங்காலம் -எளிதில் கழியாத
கார்காலம்;வந்து தீர்ந்ததேயும் -வந்து நீங்கியதாகவும்;உன் உரிமை ஒர்
உரை -
உன் கடமையை உணர்ந்து பேசுகின்ற சொற்கள்;தரு வினைத்து
ஆகையின் -
(சீதையைத் தேடித்)  தருகின்ற தொழிலைத் தன்னிடம்
கொண்டுள்ளமையால்;தாழ்விற்று ஆகுமோ -தாழ்வான
தன்மையுடையதாகுமோ?பரதன் நீ -பரதனைப் போன்ற (என்பால்
அன்புடைய) நீ;இனையன பகரற்பாலையோ -இத் தன்மையான
சொற்களைச் சொல்லத் தகுமா (என்று சுக்கிரீவனை நோக்கிக் கூறினான்).

     காலங் கழித்து நீ குறித்த தவணை தவறினாய் என்றாலும் சீதையைத்
தேடித் தராமையைக் குறித்து இரங்கிக் கூறிய நின் சொற்கள் சீதையைத்
தேடித் தரும் உன் உறுதியைத் தெரிவிக்கின்றன.  ஆதலால் உனக்கு ஒரு
தாழ்வுமில்லை.  ஆகவே பரதனைப் போன்று என்னிடம் அன்புபாராட்டும் நீ
உன்னைத் தாழ்த்திக் கூறுதல் தகுதியன்று எனச் சுக்கிரீவனை நோக்கி இராமன்
கூறினான் என்பது.

     இங்கே இராமனுடைய பரந்த கருணையும் பிறர் குற்றங்களைப்
பொறுத்தாற்றும் பண்பும் வெளிப்படுதலைக் காணலாம்.                 133

அனுமன் எங்கே என இராமன் வினாவ
அவன் சேனையுடன் வருவன்என்றல்

4402. ஆரியன், பின்னரும் அமைந்து, 'நன்கு உணர்
மாருதி எவ் வழி மருவினான்?' என,