11. தானை காண் படலம் சுக்கிரீவன் தான் ஒருங்கு திரட்டிய வானரப் படையைக் காட்ட, அதனை இராமலக்குவர் கண்ட செய்தியைக் கூறும் பகுதி இது. சேனைத் தலைவர் தத்தம் படையோடு வந்துசேர்கிறார்கள்; வானர சேனைகளின் ஆற்றலும் சிறப்பும் வெளிப்படுகின்றன; படைத் தலைவர்கள் சுக்கிரீவனை வணங்குகின்றார்கள்; அப் படைகளை இராமன் காணுகன்றான்; சுக்கிரீவன் படைகளை வரன்முறைப்படி காட்டுகிறான்; வானரப் படையின் பெருக்கம் வெளிப்படுகிறது; அப் படையைக் குறித்து இராமலக்குவர் உரையாடுகின்றார்கள். தானைத் தலைவர் தத்தம் படையுடன் வருதல் 4407. | அன்று அவண் இறுத்தனர்; அலரி கீழ்த்திசைப் பொன் திணி நெடு வரை பொலிவுறாதமுன், வன் திறல் தூதுவர் கொணர, வானரக் குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம்: |
அன்று அவண் இறுத்தனர் -அன்றைய இரவு முழுவதும் (இராம லக்குவர்) அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள்;அலரி கீழ்த் திசை -கதிரவன் கிழக்குத் திசையிலுள்ள;பொன் திணி நெடுவரை -பொன் மயமான பெரிய உதய மலையிலே;பொலிவுறாத முன் -விளங்கித் தோன்றாததற்கு முன்பே (கதிரவன் உதிப்பதற்கு முன்பு);வல் திறல் தூதுவர் -மிக்க வலிமையுடைய தூதர்கள்;கொணர -சென்று அழைக்க;குன்று உறழ் வானர நெடும் படை-மலையைப் போன்ற வானர சேனை;அடைதல் -வந்து சேர்ந்த விதத்தை;கூறுவாம் -(இனி) எடுத்துச் சொல்வோம். அலரி - பரவுகின்ற கதிர்களையுடையவனெனச் சூரியனுக்குக் காரணம் குறியாயிற்று. 1 |