| அனிகம் முன் வர, - ஆன் பெயர்க் கண்ணன் - வந்து அடைந்தான். |
முனியும் ஆம் எனின் -(தனித்தனியே ஒவ்வொரு குரங்கும்) கோபங் கொள்ளுமாயின்;அருக்கனை முரண் அற முருக்கும் -சூரியனையும் வலிமை கெடும்படி அழிக்கும்;சலம் வரின் -அடங்காத பெருஞ்சினம் வந்தால்; தனிமை -தனித் தனியாகவே;தாங்கிய உலகையும் குமைக்கும் - தங்களைத் தாங்கிக் கொண்டுள்ள உலகத்தையும் குத்தியழிக்கும்;இனிய - மகிழ்ச்சியுடைய;மாக் குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி -நாலாயிரங் கோடி கொண்ட;அனிகம் முன்வர -வானர சேனைகள் தனக்கு முன்னே வர;ஆன் பெயர்க் கண்ணன் -கவாட்சன் என்பவன்;வந்து அடைந்தான்-வந்து சேர்ந்தான். சினம் கொண்டால் சூரியனையும் தனித் தனியே அழிக்க வல்லனவும், அவ்வாறே பூமியின்மீது சினம் கொண்டாலும், அதையும் குத்தி அழிக்க வல்லனவுமான நாலாயிரங் கோடி வானர சேனையுடனே கவாட்சன் என்பான் வந்தான் என்பது. சலம்: தணியாக் கோபம். அனீகம் : வடசொல் - இங்கே அணிகம் என வந்தது. ஆன் பெயர்க் கண்ணன்: கவாட்சன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம். கோ - பசு; அக்ஷி - கண்; கோ + அக்ஷி என்பது வடமொழிச் சந்தியின்படி கவாட்சிஎன்றாயிற்று. 7 4414. | தனி வரும் தடங் கிரி எனப் பெரியவன், சலத்தால் நினையும் நெஞ்சு இற உரும்என உறுக்குறு நிலையன், பனசன் என்பவன் - பன்னிரண்டு ஆயிர கோடிப் புனித வெஞ் சின வானரப் படை கொடு - புகுந்தான். |
தனிவரும் -தனித்து வருகின்ற;தடங்கிரி எனப் பெரியவன் - பெரியமலை போன்ற பெருந் தோற்றத்தையுடையவனும்;சலத்தால் - தணியாதகோபத்தால்;நினையும் நெஞ்சு இற -நினைப்பவர்களின் மனம் உடையும்படி;உரும் என உறுக்குறு நிலையன் -இடி போல (க் கண்டவரை) நடுங்கச் செய்கின்ற தன்மையுமான;பனசன் என்பவன் -பனசன் என்ற வானரத் தளபதி;பன்னிரண்டு ஆயிர கோடி -பன்னிரண்டாயிரங் கோடி என்று சொல்லக் கூடிய;புனிதம் வெம் சினம் -தூய கடுங் கோபமுடைய; வானரம் படை கொடு -வானர சேனையோடு;புகுந்தான் -வந்து சேர்ந்தான். ஒத்தாரோடன்றிப் போர் செய்யாத தன்மையால் சினத்துக்கு வெம்மையுடன் புனிதமும் சேர்த்துக் கூறினார். 8 |