அறுநூறு கோடி என்னும் கணக்கையுடைய;கடை அமைந்த -இடங் களில் நிரம்பிய;பாயிரப் பெரும்படை கொண்டு -சிறப்பான பெரிய வானரப் படையை உடன்கொண்டு;வந்து இறுத்தான் -வந்து தங்கினான். பாயிரம் - விருது, சிறப்பு. நூல்களின் முன்னுரையாக அமைந்து நூல் நுவலும் பொருளின் சிறப்பைத் தெளிவுறப் புலப்படுத்தும் பகுதியைப் பாயிரம் என்பர்; அதுபோல சாம்பனின் படைத் திறத்தைத் தெளிவாகப் புலப்படுத்தியதாக தூசிப் படை (முன்னணிப் படை) அமைந்தது என்றும் கொள்ளலாம். சாம்பன் - ஜாம்பவான்; பிரமன் கொட்டாவியிலிருந்து கரடி வடிவத்தில் தோன்றியவன்; திருமாலின் திருவிக்கிர அவதாரத்தின்போது உலகம் முழுவதும் நிரம்பிப் பேருருவம் கொண்டிருந்த அப்பெருமானைப் பதினெட்டு முறை வலம் செய்தவன் என்று இவன் புகழை நூல்கள் கூறும். உறுப் புயச் சாம்பன் என்ற தொடருக்குப் பகைவர்க்கு அச்சம் தரும் தோள்களை உடைய சாம்பன் எனவும் பொருள் கொள்ளலாம். உரு உட்கு (அச்சம்) ஆகும் என்பது தொல்காப்பியம். 12 4419. | வகுத்த தாமரை மலர் அயன், நிசிசரர் வாழ்நாள் உகுத்த தீவினை பொருவரும் பெரு வலி உடையான், பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி தொகுத்த கோடி வெம் படை கொண்டு, - துன்முகன் - தொடர்ந்தான். |
வகுத்த தாமரை மலர் அயன் -வாழ்நாள் இவ்வளவே என வரையறுத்த தாமரை யாசனத்தானான நான்முகன;நிசிசரர் வாழ்நாள் உகுத்த தீவினை -அரக்கர்களின் வாழ்நாளை அழித்திடும் தீவினை (ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு மீறிய);பொருவு அரும் வலி உடை யான் -ஒப்பற்ற வலிமை உடையவனாகிய;துன்முகன் -துன்முகன் என்பவன்;பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி -அணி வகுக்கப்பட்ட பத்து லட்சத்தின் இரட்டிப்பு (அதாவது இருபது லட்சம்);தொகுத்த கோடி -கூட்டிய கோடி (அதாவது இருபதுலட்சம் கோடி);வெம்படை கொண்டு -கொடிய படைகளை அழைத்துக் கொண்டு;தொடர்ந்தான் -தொடர்ந்து வந்தான். துன்முகன் - அழகில்லாத முகத்தினன். நான்முகனால் அரக்கரின் வாழ்நாள் வரையறுக்கப்பட்டுள்ளது; அரக்கர் செய்த தீவினையும் அவர் வாழ்நாளுக்கு இறுதியை உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு சக்திகளுக்கும் மேலாகத் துன்முகனின் வலிமை அரக்கருக்கு அழிவு செய்தே தீரும் என்பது கருத்து. 13 4420. | இயைந்த பத்து நூறாயிரப் பத்து எனும் கோடி |
|