12. நாட விட்ட படலம் இராமபிரான் கட்டளைப்படி சுக்கிரீவன் சீதையைத் தேடும்படி வானரப் படைத் தலைவர்களை எல்லாத் திசைகளிலும் விடுத்த செய்தியையுணர்த்துவதைக் கூறும் படலம் இது. படையளவு பற்றிச் சுக்கிரீவனும் இராமனும் உரையாடுகின்றார்கள்; இராமன் இனி நடக்க வேண்டுவன குறித்துச் சிந்தனை செய்க என்று சுக்கிரீவனிடம் கூறுகிறான்; அச்சுக்கிரீவன் அனுமனைஅங்கதன் முதலியவர்களுடன் தென்திசைக்கு அனுப்புகிறான்; பிற திசைகளுக்கு மற்றவர்களை அனுப்புகிறான்; ஒரு திங்களுக்குள் தேடித் திரும்பிவருமாறு அவர்களுக்கு ஆணையிடுகிறான்; மேலும் தென்திசை செல்லும் வானர வீரர்க்குச் சுக்கிரீவன் வழி கூறுகிறான்; இராமனோ, அனுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறுகிறான்; இராமன் அனுமனுக்கு உரைத்த அடையாளச் செய்திகள் சுட்டிக் காட்டப்படுகின்றன; பின்னர் இராமன் மோதிரம் அளித்து விடைகொடுத்து அனுமனை அனுப்புகிறான். படையின் அளவு பற்றி இராமனும் சுக்கிரீவனும் உரையாடல் கலிவிருத்தம் 4447. | 'வகையும், மானமும், மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் இன்றி, நிரைந்து பரந்து எழும் தகைவு இல் சேனைக்கு, அலகு சமைந்தது ஓர் தொகையும் உண்டுகொலோ?' எனச் சொல்லினன். |
'வகையும் -ஆராய்தலும்;மானமும் -ஒப்புமையும்;மாறு எதிர்ந்து ஆற்றுறும் பகையும் -எதிர்த்துச் செயல்படக்கூடிய பகைவரும் இன்றி - இல்லாமல்;நிரைந்து -வரிசையாக அமைந்து;பரந்து எழும் -விரிவாகப் பரவி எழுந்துள்ளதும்;தகைவு இல் சேனைக்கு -தடுப்பதற்கு எவரும் இல்லாததுமான சேனைக்கு;அலகு சமைந்தது ஓர் தொகையும் உண்டுகொலோ -அளவு கொண்டு சொல்லக்கூடிய ஓர் எண்ணிக்கையும் உண்டோ';என -என்று இராமன் வினவ;சொல்லினன் -சுக்கிரீவன் பின்வருமாறு சொன்னான். |