பக்கம் எண் :

530கிட்கிந்தா காண்டம்

இரத்தினங்களின் ஒளியால் இருள் விலகுவதற்குக் காரணமான; நருமதை
உன்னுவீர் -
நருமதையாற்றைச் சென்று அடைவீர்.

     நருமதை நதி: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஓர் ஆறு;
தேவர்கள் நீராடும் தெய்வீகமும் வண்டுகள் இசைபாடும் சூழல் இனிமையும்,
மணியொளியால் இருள் நீங்கும் செல்வ வளமும் அந்த நருமதை நதிக்கு
உள்ளதெனக் கற்பனை செய்தமை நயமானது.  ஐந்து - பஞ்சமம்: ஏழு
சுரங்களுள் இது ஐந்தாவது.  அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது - சொல்நயம்.
                                                           13

4460.'வாம மேகலை வானவர் மங்கையர்,
காம ஊசல் களி இசைக் கள்ளினால்,
தூம மேனி அசுணம் துயில்வுறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர்.

     (அங்கிருந்து)வாம மேகலை வானவர் மங்கையர் -அழகிய
மேகலையணிந்த தேவ மாதர்கள்;காம ஊசல் -விருப்பத்தோடு ஊஞ்சல்
ஆடும்போது;களி இசைக் கள்ளினால் -மகிழ்ச்சியால் பாடுகின்ற
இசையாகிய மதுவால்;தூம மேனி அசுணம் - புகை போன்ற கரிய
நிறமுடைய அசுணமாப் பறவைகள்;துயில்வுறும் -தூங்குவதற்கு இடமான;
ஏம கூடம் எனும் மலை எய்துவீர் -
ஏமகூடம் என்னும் மலையைப் போய்ச்
சேருங்கள்.

     ஏமகூட மலையில் தேவமாதர்கள் வந்து ஊஞ்சலாடும்போது களிப்பினால்
பாடுகினற இசைப் பாடலால் அசுணப் பறவை தூங்கும் என்பது.  அசுணம் -
இசையுணர்வுடைய பறவை; விலங்கு என்றும் கூறுவர். அரமங்கையர்: மரூஉ.
(அமர மங்கையர்). ஏமகூடம் - எட்டுக் குலகிரிகளில் ஒன்று. வாமம் - அழகு.
                                                           14

4461.'நொய்தின், அம் மலை நீங்கி, நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில
வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர்.

     நொய்தின் -விரைவாக;அம்மலை நீங்கி -அந்த ஏமகூட மலையை
விட்டு அகன்று;நுமரொடும் -உங்களைச் சேர்ந்த வானரர் களுடனே;
பொய்கையின் கரை -
(அங்குள்ள) தடாகத்தின் கரையானது;பிற்படப்
போதிர் -
பின்னாகும்படி (அதை விட்டு) அப்பாலே செல்லுங்கள்;செய்ய
பெண்ணை -
(மகளிர்க்குரிய) நற் பண்புகளைக் கொண்ட சீதையை;கரிய
பெண்ணை -
கரிய பெண்ணை நதியின் இடங்களில்;சில வைகல் தேடி -
சில நாட்கள் தேடிப் பார்த்து;கடிது வழிக்கொள்வீர் -விரைந்து மேலே
செல்லுங்கள்.

     செய்ய பெண்ணை கரிய பெண்ணை - முரண் தொடை. வைகல் -
கழியும் தன்மையுடையது: காரணப்பெயர். நொய்து, கடிது: விரைவுபற்றி வந்த
வினையுரிகள்.                                                15