4462. | 'தாங்கும் ஆர் அகில், தண் நறுஞ் சந்தனம், வீங்கு வேலி விதர்ப்பமும், மெல்லென நீங்கி, நாடு நெடியன பிற்பட, தேங்குவார் புனல் தண்டகம் சேர்திரால். |
தாங்கும் -நறுமணத்தைக் கொண்ட;ஆர் அகில் -ஆத்தியும் அகில் மரங்களும்;தண் நறுஞ் சந்தனம் -குளிர்ந்த நறுமணமுள்ள சந் தனமரங்களும் (ஆகியவற்றை);வீங்கு வேலி -விரிந்த வேலியாகக் கொண்ட; விதர்ப்பமும் -விதர்ப்ப நாட்டையும்;மெல்லென நீங்கி -மெதுவாகக் கடந்து;நெடியன நாடு பிற்பட -பல காதம் நீண்ட பல நாடுகளும் உங்களுக்குப் பின்னாகுமாறு;தேங்கு வார்புனல் -மிக்க நீர் நிறைந்து; தண்டகம் சேர்திர் -தண்டகாரணியத்தைச் சென்று அடைவீர். விதர்ப்ப நாட்டைச் சுற்றி வேலியாக அகில் மரங்களும், சந்தன மரங்களும் நிறைந்திருக்குமென்பது, தேங்குதல் - நிறைதல். 16 4463. | 'பண்டு அகத்தியன் வைகியதாப் பகர் தண்டகத்தது, தாபதர்தம்மை உள் கண்டு, அகத் துயர் தீர்வது காண்டிரால், முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில். |
முண்டகத் துறை என்று -(அதன் பின்பு) முண்டகத் துறையென்று கூறப்படுகின்ற;ஒரு மொய் பொழில் -மரங்கள் அடர்ந்த ஒரு சோலை யானது;பண்டு அகத்தியன் வைகியதாப் பகர் -பழங்காலத்து அகத்திய முனிவர் வசித்ததாகக் கூறப்படுகின்ற;தண்டகத்தது -தண்ட காரணியத்திலுள்ளது;தாபதர்தம்மை உள் கண்டு -தவஞ்செய்யும் முனிவர்களைத் தம் மனத்திற் காண்பதால்;அகத் துயர் தீர்வது -தங்கள் மனத் துன்பத்தை நீக்குவதற்குக் காரணமாயிருப்பது;காண்டிர் -(அதனைச்) சென்று காணுங்கள். அகத்தியர் வசிக்கின்ற தண்டகாரணியத்திலுள்ளதும், வழிபட்ட மாத்திரத்தில் அவர்களின் மனத் துன்பத்தை மாற்றும் பெருமை வாய்ந்த முனிவர்கள் நிரம்பியிருக்கப் பெற்றுதுமாகிய முண்டகத் துறையைச் சென்று காணுங்கள் என்பது. தாபதர் - தவம் செய்பவர். முண்டகத் துறை: தாமரை நிரம்பிய நீர்நிலை - சோலைக்கு ஆயிற்று அகத்தியர் தண்டக வனத்தும், பொதிய மலையிலும் தென்னாட்டில் பல இடங்களிலும் இருந்ததாக வரலாறு உண்டு. கம்பராமாயணத்தில் 2665, 4477 ஆகிய பிற பாடல்களிலும் அகத்தியர் உறைவிடங்கள் குறிக்கப் பட்டுள்ளன. இப்பாடலில் முன்பு அகத்தியர் இருந்ததாகக் குறிப்பிடுவதும், பொதிகையை 'என்றும் அவன் உறைவிடமாம்' (4477) என்று குறிப்பிடுவதும்கருதத்தக்கன. 17 4464. | 'ஞாலம் நுங்குறு நல் அறத்தோர் பொருள் போல நின்று பொலிவது, பூம் பொழில்; சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி காலம் இன்றிக் கனிவது காண்டிரால். |
|