இனியவளாக இருந்தாய்;இனி - இனிமேல்;துன்பம் ஆய்முடிதியோ - துன்பத்தைத் தருபவளாக ஆகிவிடுவாயோ? என்றதும் -என்று நான் சீதையிடம் கூறியதையும்;சொல்லுவாய் -(நீ அவளிடம்) சொல்வாய். கைகேயி விருப்பத்தின்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ உடன்பட்டுச் சீதையிடம் சென்று 'நான் பதினான்கு வருடம் வனவாசம் செய்து மீண்டு வருவேன்; நீ இங்கே வருந்தாமல் இரு' என்றான்; அதுகேட்ட சீதை கணவன் காட்டிற்கு செல்லுகின்றான் என்பது குறித்துச் சிறிதும் வருந்தாமல் 'நீ இங்கே வருந்தாமல் இரு' என்று கூறிய சொல்லுக்கு மிக வருந்தி உடன்வருவேனென்று வற்புறுத்திக் கூற, அதற்கு இராமன் 'எல்லையற்ற இடர் தருவாய்' என்றான் என்பது (1832) இங்கு நினைவு கூரத்தக்கது. 70 4517. | ' ''ஆன பேர் அரசு இழந்து, அடவி சேர்வாய்; உனக்கு யான் அலாதன எலாம் இனியவோ? இனி'' எனா, மீன் உலாம் நெடு மலர்க் கண்கள் நீர் விழ, விழுந்து, ஊன் இலா உயிரின் வெந்து, அயர்வதும், உரைசெய்வாய். |
ஆனபேர் அரசு இழந்து -உனக்குரிய பெரிய அரசை விட்டு;அடவி சேர்வாய் -காட்டிற்குச் செல்பவனே!இனி -இனிமேல்;யான் அலாதன எலாம் -என்னைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும்;உனக்கு இனியவோ - உனக்கு இன்பம் தருவனவோ? (என்னொருத்தியால் மட்டும் உனக்குத் துன்பமோ); எனா -என்று (என்னை நோக்கிக்) கடுமையாகக் கூறி (சீதை); மீன் உலாம் -மீன்கள்போலப் பிறழ் வனவும்;நெடுமலர்க் கண்கள் - பெரிய தாமரைமலரை ஒப்பனவுமாகிய கண்களில்;நீர் விழ விழுந்து -நீர் பெருகக் கண்ணீர் சிந்தி;ஊன் இலா உயிரின் -உடலில் நில்லாது தவிக்கின்ற உயிர் போல;வெந்து அயர்வதும் -மிகவும் தளர்ந்து சோர்ந்ததையும்;உரை செய்வாய் - (நீ அவளிடம்) சொல்வாய். இராமன் வனவாசஞ்செய்யப் புறப்படுகின்ற நேரத்தில் சீதையிடம், 'நீ என்னோடு வருவாயானால் என் துன்பத்திற்குக் காரணமாவாய்' என்று கூற, அது கேட்டுச் சீதை மிகவும் வருந்தி 'என் துறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்' (1833) எனக் கூறியதைக் குறிக்கிறான். அயர்வது: காலவழுவமைதி. 71 4518. | 'மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும் கல்லின் மா மதிள் மணிக் கடை கடந்திடுதல்முன், |
|