அடியார்கள் கடவுளின் அருளை முன்னிட்டுக் கொண்டு செய்தொழில் தொடங்குதல் இயல்பாதலின் 'வார்கழலினான் அருளொடும் போயினான்' என்று கருத்தில் கழலினான் என்பது இராமனைக் குறித்ததாகவும் பொருள் கொள்ளலாம். அசோக வனத்துச் சோகத்தாளாகிய நங்கைக்கு நன்னம்பிக்கை தருவதற்கு உரியதாகலின் 'நல்மோதிரம்' என்று கூறப்பெற்றது. 73 4520. | அங்கதக் குரிசிலோடு, அடு சினத்து உழவர் ஆம் வெங் கதத் தலைவரும், விரி கடற் படையொடும், பொங்கு வில் - தலைவரைத் தொழுது, முன் போயினார் - செங்கதிர்ச் செல்வனைப் பணிவுறும் சென்னியார். |
அங்கதக் குரிசிலோடு -அங்கதனாகிய நம்பியினுடனே;அடு சினத்து உழவர் ஆம் -(பகைவரைக்) கொல்லுகின்ற கோபத்தையுடைய வீரரான; வெங் கதத் தலைவரும் -மிக்க வலிமையுள்ள (ஜாம்பவான் முதலான) தளபதிகளும்;செங்கதிர்ச் செல்வனை -சிவந்த கதிர்களை யுடைய சூரியன் மகனான சுக்கிரீவனை;பணிவரும் சென்னியார் -வணங்கும் தலையினராய்; பொங்கு வில் தலைவரைத் தொழுது -சிறந்த வில்வீரர்களான இராமஇலக்குவரையும் வணங்கி;விரிகடற் படையொடும் -பரந்த கடல்போன்ற வானர சேனையுடனே;முன் போயினார் -(தென்திசை நோக்கி) முற்பட்டுச் சென்றார்கள். அங்கதன் முதலியோர் சுக்கிரீவனையும், இராம இலக்குவரையும் வணங்கித் தமக்கு நியமித்துள்ள தென்திசை நோக்கிப் புறப்பட்டார்களென்பது. உழவர்: வீரர்: பகைவரின் உடம்பாகிய வயல்களில் தம் படைகளாகிய கலப்பைகளைக் கொண்டு உழுது வெற்றியாகிய பயிரை விளைப்பவராதலால் இது வீரரைக் குறிக்கும். - வில்லேருழவர் வாளேருழவர், சொல்லேருழவர் என்றாற்போல. 74 |