13. பிலம் புக்கு நீங்கு படலம் சுக்கிரீவனது கட்டளைப்படி தென்திசை நோக்கிச் சென்ற வானரவீரர்கள் பல இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டு சென்றார்கள்; வழியில் உள்ளதொரு பாலைவனத்திற் புகுந்தார்கள்; அந்த நிலத்தின் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இல்லாதவராய் அங்குள்ள பிலத்திலே புகுந்து அதன் இருட்செறிவால் வழிதெரியாது திகைத்து, அனுமனின் வாலைப் பற்றிச் சென்று, பின்பு அங்குள்ள நகரத்தில் புகுந்து அங்கு வசித்துவந்த ஒரு தவப் பெண்ணின் உதவியால் யாவரும் அப்பிலத்திலிருந்து வெளிவந்த செய்தியைக் கூறும் பகுதி இது. வானர வீரர் நான்கு திசைகளுக்கும் செல்லுகிறார்கள்; சென்றவர், விந்தமலைப் பக்கங்களில் தேடுகிறார்கள்; நருமதைக் கரையை வானரர் அடைகிறார்கள்; பின்பு ஏமகூட மலையைச் சார்கின்றார்கள்; அம் மலையை இராவணன் மலையென ஐயுறுகின்றார்கள்; ஆனால், அங்குச் சீதையைக் காணாமல் அந்த மலையிலிருந்து இறங்குகிறார்கள். அங்கதன், அவ் வீரர்களைப் பார்த்து, 'பல பகுதியாகப் பிரிந்து தேடி, மயேந்திர மலையில் வந்து சேருங்கள்' என்று கூறுகிறான். பின்னர், மாருதி முதலியோர் ஒரு சுரத்தை அடைகின்றார்கள். அச்சுரமோ வெம்மை மிகுந்தது. அதனால் வருந்திய வானரர் பிலத்திற்குள் புகுகின்றார்கள்; அங்கே, அவர்கள் இருளில் வருந்துகின்றார்கள்; அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனுமன் அவர்களை அழகிய நகருக்குக் கொண்டு செல்லுகிறான்; அங்கே மனிதர்களைக் காணாது வாரனரர் திகைக்கின்றார்கள்; அப்போது சாம்பன் கலங்கி வருந்துகிறான்; அச் சாம்பனை மாருதி தேற்றுகின்றான். அச் சமயம் அந் நகரின் நடுவில் சுயம்பிரபையைக் காணுகின்றனர்; அச் சுயம்பிரபையைச் சீதையோ என அவர்கள் ஐயுறுகிறார்கள். அவள் அவர்களை வினாவ அதற்கு அவர்கள் விடையளிக்கின்றார்கள். இராமனைப் பற்றி அச் சுயம்பிரபை வினாவ அனுமன் விடையளிக்கின்றான். பின்னர் அவள் அவர்களுக்கு விருந்தளித்துத் தன் வரலாறு கூறுகிறாள்; அனுமனை, இருளிலிருந்து மீளுவதற்கு ஆவன செய்யுமாறு வானரர் வேண்டுகிறார்கள். அனுமன் பேருருக் கொண்டு பிலத்தைப் பிளந்து வானுற ஓங்கி நிற்கிறான்; அப்பிலத்தின் மேற்பகுதியை மேலை கடலில் எறிகிறான்; பின்பு, சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுகிறாள்; அவள் சென்றபின், வானரர் பொய்கைக் கரை அடைகின்றார்கள். வானரவீரர் நான்கு திசையிலும் செல்லுதல் கலிவிருத்தம் 4521. | போயினார்; போன பின், புற நெடுந் திசைகள்தோறு, ஏயினான், இரவி காதலனும்; ஏயின பொருட்கு |
|