சென்றவராகிய வானர வீரர்களின்;திறன் எடுத்து உரை செய்வாம்- செயல்திறனை எடுத்துச் சொல்லுவோம். மற்றைத் திசைகளிற் சென்ற வானரர் செய்தி கதைப் போக்கிற்கு வேண்டுவதில்லையாதலால் அதைத் தவிர்த்து, இக் கதைக்கு மிக இன்றியமையாததாகிய தென்திசைக்கண் சென்ற வானர வீரர் செயலைக் கூறுகின்றார். என்றுமுள தென்தமிழாதலானும, உலகிலே இலக்கண வரம்பிலா மொழிகள் போலல்லாமல் இலக்கண வளமுடைமையானும், திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலான மொழிகளுக்குத் தாயெனக் கருதப்படுவதாலும், கொல்வளம், பொருள்வளம், இனிமை எளிமை முதலியன உண்மையானும் சமய குரவர்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப்பரவியது தமிழ் மொழியே யாதலினாலும் 'வண்டமிழ்' என்றார். சீதையைக் காண்டற்கியையாததாதலின் தென்திசை யொழிந்த மூன்றையும் 'வன்திசை' யென்றும், இனிய தமிழ் வழங்கும் திசையாதலின் 'தென்திசை' யென்றும் கூறினார். ஆசிரியர்தம் நாட்டுப்பற்றும், தமிழ்ப்பற்றும் இப்பாடலிற் பொங்கித் ததும்புவதைக்காணலாம். 2 விந்தமலைப் பக்கங்களில் தேடுதல் 4523. | சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து, அந்தி வானத்தின் நின்று அவிர்தலான், அரவினோடு இந்தி யாறு எய்தலான், இறைவன் மா மௌலிபோல் விந்த நாகத்தின் மாடு எய்தினார், வெய்தினால். |
சிந்துராகத்தோடும் -சிந்துரமென்னும் செம் பொடியோடும்;திரள் மணிச்சுடர் செறிந்து -திரண்ட மாணிக்கங்களின் ஒளி நெருங்கி;அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் -அந்தி வானத்தில் காணப்படும் செவ்வானம்போல விளங்குவதாலும்;அரவினோடு இந்து யாறு எய்தலான் - பாம்புகளும், சந்திரனும் வான கங்கையும் பொருந்துவதாலும்;இறைவன் மா மௌலி போல் -சிவபெருமானின் பெரிய சடைமுடி போன்ற; விந்தநாகத்தின் மாடு -விந்திய மலையின் சாரலை;வெய்தினால் எய்தினார் -விரைவாகச் சென்ற அடைந்தார்கள். சிவபெருமானுக்கும் விந்திய மலைக்கும் ஒப்பு: செம்மொழிச் சிலேடை, சிவபிரான் செஞ்சடை முடியுடையோனானது, தாருக வன முனிவர்களால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த நாகங்களை வலியடக்கி அணியாகப் பூண்டது. தக்கனது சாபத்தால் கலை குறைந்த சந்திரனைச் சடைக்கண் தரித்தது. பகீரதனது வேண்டுகோளினால் கங்கையை முடிமீது கொண்டது என்ற இவை சிவபிரான் செய்கைகளாம். |