எல்லை மா கடல்களே -(பூமியைச் சுற்றிலும்) பெரிய எல்லை யாகவுள்ள கடல்களே;ஆகுமாறு எய்தினார் -தமக்கு ஒப்பாகும் என்று சொல்லுமாறு சென்ற அந்த வானரவீரர்கள்;மல்லல் மா ஞாலம் -வளமை மிக்க பெரிய பூமியிலுள்ள உயிர்களுக்கு;ஓர் மறு உறா வகையின் - எவ்விதத் துன்பமும் உண்டாகாத வகையில்;அச்சில் அல் ஓதிஐ -அந்தப் பொன்தகட்டையணிந்த இருண்ட கூந்தலையுடைய சீதையை;இருந்த உறைவிடம் -(அவள்) தங்கியிருந்த இடத்தை;தேடுவார் -தேடுபவர்களாய்; உலகினை -(அவ்விந்திய மலையின்) பூமி முழு வதையும்;பொது இலா வகையினால் -தம்மையல்லாமல் வேறெவர்க்கும் எவ்விதத் தொடர்புமில்லாதபடி;எய்தினார் -சென்று அடைந்தார்கள். வானரர்கள் விந்தியமலையில் எந்த இடமும் விட்டுப்போகாதவாறு தாமே பரவிநின்று முழுவதும் சீதையைத் தேடினார்களென்பது. அம்சில் ஓதி - அஞ்சில் ஓதி என விகாரமாகலாம். சில் : மகளிர் தலையிலணியும் தகட்டணி. சில்அல் ஓதி : அன்மொழித் தொகைப் பன்மொழித்தொடர். உலகு : பரந்த பூமியின் ஒரு பகுதி. ஓதியை என்றதில் பொருந்திய இரண்டாம் வேற்றுமை உருபு பிரித்துக் காட்டப்பட்டது. இருந்த உறைவிடம் என்பது இருந்துறைவிடம் எனச் செய்யுட் சந்தம் நோக்கி அகரம் தொகுத்து இயையும். 5 4526. | விண்டு போய் இழிவர்; மேல் நிமிர்வர்; விண் படர்வர்; வேர் உண்ட மா மரனின், அம் மலையின்வாய், உறையும் நீர் மண்டு பார்அதனின், வாழ் உயிர்கள் அம் மதியினோர் கண்டிலாதன, அயன் கண்டிலாதனகொலம். |
அம்மதியினோர் -நல்லறிவுடைய அந்த வானரர்கள்;விண்டு போய - (தனித்தனியே) பிரிந்து சென்று;இழிவர் - (சிலர்) இறங்கிச் செல்வர்;மேல் நிமிர்வர் -(சிலர்) மேலேறிச் செல்வர்;விண் படர்வர் -(சிலர்) வானத்தில் தாவிச் செல்வர்;வேர் உண்ட மா மரனின் -வேர்களால் நீரை உறிஞ்சும் மரங்களினிடத்தும்;அம்மலையன் வாய் -அந்த மலையினிடத்தும்;உறையும் நீர் மண்டு -தங்கிய நீர் நிரம்பப் பெற்ற;பார் அதனின் -பல இடங்களிடத்தும்;வாழ் உயிர்கள் -வாழுகின்ற உயிர்களில்;கண்டிலாதன - (அவ் வானர வீரர்களால்) தேடிக் காணப்படாதன இருக்குமானால் (அவை); அயன் கண்டிலாதன ஆம் -பிரமனால் படைக்கப் படாதவையேயாகும். மரஞ் செறிந்த இடங்களும் வெற்றிடமும் புனல் நிரம்பிய இடமுமாய் மூன்று பகுப்பாயுள்ள அந்த விந்தியமலை முழுவதிலும் பிரமனது படைப்பிற்கு உட்பட்ட எல்லாவுயிர்களையும் வானரர்கள் தேடிப் பார்த்தார்களென்பது. |