பிரமன் படைக்காத பொருள்கள் இல்லை; அதுபோன்று இந்த வானர வீரர்கள் காணாத உயிர்களோ பொருள்களோ இல்லை. நீர் மண்டு பார்: ஓடை, சுனை முதலியன. வேறு உரை: விண்டு போய் இழிவ - நிலத்தைத் துளைத்துக் கொண்டு பூமிக்குள் செல்லும் (பாம்பு முதலிய) ஊர்வனவும்; மேல் நிமிர்வ - நிலத்தில் வாழும் விலங்கினங்களும்; விண் படர்வ -ஆகாயத்தில் பறக்கும் பறவைகளுமாய் அம் மலையின் கீழும் மேலும் புடையிலும் உறையும் உயிர்களில் இவர்கள் கண்ணில் படாதன ஒன்றுமேயில்லை எனவும் உரை கூறலாம். 6 நருமதைக் கரையில் வானரர் கலிவிருத்தம் (வேறுபட்ட சந்தம்) 4527. | ஏகினார், யோசனை ஏழொடு ஏழு; பார் சேகு அறத் தென் திசைக் கடிது செல்கின்றார், மேக மாலையினொடும் விரவி, மேதியின் நாகு சேர் நருமதி யாறு நண்ணினார். |
பார் சேகு அற -பூமியின் திண்மை சிதையுமாறு;தெண்திசைக் கடிது செல்கின்றார் -தென்திசையிலே (சீதையைத் தேட) விரைந்து செல்லுகின்ற வானர வீரர்கள்;ஏழொடு ஏழு யோசனை ஏகினார் -பதினான்கு யோசனையளவு சென்று;மேதியின் நாகு சேர் -எருமை இளங் கன்றுகள் சேர்ந்துள்ள;மேக மாலையினொடும் விரவி -கரிய மேகங்களின் வரிசைகளோடு கலந்து;நருமதை யாறு -நருமதையென் னும் நதிக் கரையை; நண்ணினார் -சென்று அடைந்தார்கள். கடலில் படிந்து மேகங்கள் நீர் பருகமென்று கூறுவது கவி மரபு. நாகு : எருமைக் கன்று அங்குள்ள எருமைக்கன்றுகள் நீருண்ட காளமேகங்களோடு வேறுபாடு தோன்றாதவாறு நருமதை நீரில் படிகின்றன என்பதாம். வானரர்கள் பெருங்கூட்டமாய் இயங்குவதால் நிலத்தின் தண்மை சிதைந்தது என்பதைப் 'பார் சேகு அற' என்ற தொடர் விளக்கிற்று. சேரன் செங்குட்டுவனின் சேனை சென்ற போது நீலகிரி மலையின் முதுகு நெளிந்தது என்று சொல்லும் வருணனையை நினைவு கூர்க. (சிலப். கால்கோள்.82) 7 4528. | அன்னம் ஆடு இடங்களும், அமரர் நாடியர் துன்னி ஆடும் இடங்களும், துறக்கம் மேயவர் முன்னி ஆடும் இடங்களும், சுரும்பு மூசு தேன் பன்னி ஆடு இடங்களும், பரந்து சுற்றினார். |
அன்னம் ஆடு இடங்களும் -அன்னப் பறவைகள் விளையாடும் இடங்களையும்;அமரர் நாடியர் -தேவ மாதர்களான அரம்பை முதலிய பெண்கள்;துன்னி ஆடு இடங்களும் -வந்து நீராடும் இடங்களையும்; துறக்கம் மேயவர் -சொர்க்கலோகத்திலுள்ள வானவர்; முன்னி |