பக்கம் எண் :

பிலம் புக்கு நீங்கு படலம் 617

இயக்கு இல் பில தீவா -அழிவில்லாத பிலத்தீவென்று பெயருள்ளதாக;
நின்று நிலை பெற்றுளது -
இப்பொழுதும் உள்ளதாகி நிலைபெற்று
விளங்குகின்றது;நீள் நுதலியோடும் -நீண்ட நெற்றியையுடைய
சுயம்பிரபையோடும்;குன்று புரை தோளவர் -மலைகளைப் போன்ற
தோள்களையுடைய வானர வீரர்கள்;எழுந்து -(அந்தப் பிலத்திலிருந்து)
வெளியேறி;நெறி கொண்டார் -(தாம் செல்வதற்கான) வழியை
அடைந்தார்கள் (அப்பொழுது;நல் நுதலி -அழகிய நெற்றியைக் கொண்ட
அச் சுயம்பிரபை;பொன்திணி விசும்பினிடை போனாள் -பொன்னாலியன்ற
தேவலோகத்திற்குச் சென்றாள்.

     விசும்பு: இடவாகுபெயர். வானர வீரர்கள் சீதையை நாடிச் செல்லும்
போது இளைத்துக் களைத்து, நீர்வேட்கை மிக்கவராய், ருட்சபிலம் என்னும்
பிலத்துள் புகுந்து மிகவும் வருந்தி உள்ளே சென்று, பொன்மயமான ஒரு
வனத்தையடைந்து அங்கிருந்த சுயம்பிரபை யென்னும் தவமுதியவளைக் கண்டு
வினவி, அந்தவனம் மயன் என்பவனால் உருவாக்கப்பட்ட தென்றும், அவன்
காதலுக்குப் பாத்திரமான ஏமை என்னும் தேவமகளுக்கு உரித்தாயிற்றென்றும்
அறிந்தபின், தங்களை அப் பிலத்திலிருந்து வெளியேற்றுமாறு அந்தச்
சுயம்பிரபையை வேண்ட அவளோ இவர்களின் கண்களை மூடிக்
கொள்ளுமாறு கூறித் தன் தவப் பெருமையால் பிலத்தின் வெளியே கொண்டு
வந்து சேர்த்தாள் என்று வான்மீகம் கூறும்.  வானரர் விடுதலை பெறச்
சுயம்பிரபை உதவினாள், என முதல்நூல் கூறியிருப்ப, அவளுக்கும் சேர்ந்து
விடுதலை அருளியவன் அனுமனே எனக் கம்பர் மாற்றியிருக்கிறார்.
மாற்றத்தால் அனுமன் பெருமை மிகுவதை உணர்க.                   72

வானரர் பொய்கைக் கரை அடைதல்

4593.மாருதி வலித் தகைமை
      பேசி, மறவோரும்,
பாரிடை நடந்து, பகல்
      எல்லை படரப் போய்
நீருடை பொய்கையினின் நீள்
      கரை அடைந்தார்;
தேருடை நெடுந்தகையும் மேலை
      மலை சென்றான்.

     மறவோரும் -வலிமையுள்ள வானர வீரர்களும்;மாருதி வலித்த
கைமை பேசி -
அனுமனது வலிமையின் தன்மையைப் புகழ்ந்து கூறிக்
கொண்டு;பகல் எல்லை படர -அன்றைய பகல்முழுவதும்;பாரிடை
நடந்துபோய் -
பூமியில் நடந்து சென்று;நீருடைய பொய்கையினின் -நீர்
நிரம்பிய ஒரு தடாகத்தின்;நீள் கரை அடைந்தார் -நீண்ட கரையை
அடைந்து தங்கினார்கள் (அப்பொழுது);தேருடை நெடுந்த கையும் -
(வானத்தில் செல்லும்) தேரையுடைய பெருந்தகையான சூரியனும்;மேலை
மலை சென்றான் -
மேற்குத் திசையிலுள்ள அத்தமனகிரியை அடைந்தான்
(மறைந்தான்).