போல்வான்' (4595) என உவமித்ததற்கேற்ப இங்கு அவன் அங்கதனால் அடியுண்டு விழுந்ததை இடியுண்டு விழுந்த மலை என்றார். 8 அசுரனைப் பற்றி அனுமன் வினாவும் அங்கதன் விடையும் 4602. | 'யார் கொலாம் இவன்? இழைத்தது என்?' எனா, தாரை சேயினைத் தனி வினாவினான். மாருதேயன்; மற்று அவனும், 'வாய்மை சால் ஆரியா! தெரிந்து அறிகிலேன்' என்றான். |
மாருதேயன் -வாயுவின் மகனான அனுமன்;தாரை சேயினை - தாரையின் மகனான அங்கதனை நோக்கி;இவன் யார் கொல் ஆம் - (இறந்து கீழே விழுந்து கிடக்கும்) இவன் யார்? இழைத்தது என் -இவன் செய்தது என்ன?எனா -என்று;தனி வினாவினான் -குறிப்பிட்டுக் கேட்டான்;மற்று -பின்பு;அவனும் -அந்த அங்கதனும் (அனுமனை நோக்கி);வாய்மை சால் ஆரியா -வாய்மை நிறைந்த பெரியவனே!தெரிந்து அறிகிலேன் -நான் இவனைப் பற்றி ஒன்றும் அறியேன்;என்றான் -என்று விடை கூறினான். கொல் - ஐயப்பொருளையும், சால் - மிகுதிப் பொருளையும் உணர்த்திய உரிச் சொற்கள். இவன் என்பது மத்திமதீபம் இடைநிலை விளக்காய் நின்று 'யார் கொலாம்' என்பதையும், 'இழைத்ததென்' என்பதையும் தழுவியது. மாருதேயன்: மருத்தின் புதல்வன் - தத்திதாந்தப் பெயர். வாய்மை, கல்வி முதலியவற்றாலும் ஒழுக்கத்தாலும் சிறந்தவனாதலால் அனுமனை அங்கதன் 'ஆரியா' என்று விளித்தான். 9 சாம்பவான் துமிரன் வரலாறு கூறுதல் 4603. | 'யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்; தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே - ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் தானவன்' என, சாம்பன் சாற்றினான். |
(அது கேட்டுச்) சாம்பன் -(அனுமனை நோக்கி) கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான்;யான் இவன்தனை -நான் இந்த அசுரனைக் குறித்து;தெரிய எண்ணினேன் -இன்னானென்று தெரிந்து கொள்ளும்படி நினைத்துப் பார்த்தேன்;தூ நிவந்த வேல் -பகைவரது புலால் நிறைந்த வேற்படையைத் தாங்கியுள்ள;துமிரன் என்னும் பேரான் -துமிரன் என்னும் பெயரையுடையவன்;இவ் ஆழ்புனல் பொய்கை ஆளும் -ஆழ்ந்த நீரையுடைய இந்தப் பொய்கையை ஆட்சி செய்கின்ற;ஓர் தானவன் -ஓர் அசுரனாவான்;எனச் சாற்றினான் -என்று கூறினான். |